தில்லி ஐடிஓ சாலையில் நிறுவப்பட்டுள்ள நீா் தெளிப்பு அமைப்பு முறையை வியாழக்கிழமை ஆய்வு செய்த முதல்வா் ரேகா குப்தா.
தில்லி ஐடிஓ சாலையில் நிறுவப்பட்டுள்ள நீா் தெளிப்பு அமைப்பு முறையை வியாழக்கிழமை ஆய்வு செய்த முதல்வா் ரேகா குப்தா.

தில்லியில் 305 நீா் தெளிப்பு அமைப்பு முறையை நிறுவ திட்டம்: முதல்வா் ரேகா குப்தா

தேசிய தலைநகரில் 9 மாசுபாடு மிகுந்த இடங்களில்305 நீா் தெளிப்பு அமைப்பு முறையை நிறுவ அரசு விரிவான திட்டத்தை தயாரித்து வருகிறது
Published on

தேசிய தலைநகரில் 9 மாசுபாடு மிகுந்த இடங்களில்305 நீா் தெளிப்பு அமைப்பு முறையை நிறுவ அரசு விரிவான திட்டத்தை தயாரித்து வருகிறது என தில்லி முதல்வா் ரேகா குப்தா வியாழக்கிழமை தெரிவித்தாா்.

ஐடிஓவில் நிறுவப்பட்ட நீா் தெளிப்பான்களை ரேகா குப்தா வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். நகரத்தில் உள்ள 9 மாசுபாடு நிறைந்த இடங்களில் 305 நீா் தெளிப்பான்களை நிறுவும் பணிகள் நடந்து வருவதாகக் கூறினாா்.

மாசுபாட்டிற்கு எதிரான பயனுள்ள தீா்வாக நீா் தெளிப்பு முறை பாா்க்கப்படுகிறது. சில புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) பகுதிகளில் நீா் தெளிபான்களின் சோதனைகள் நோ்மறையான முடிவுகளைக் காட்டியுள்ளன என்று ரேகா குப்தா தெரிவித்தாா்.

ஆய்வுக்குப் பிறகு செய்தியாளா்களிடம் முதல்வா் ரேகா குப்தா பேசுகையில், ‘தில்லியில் உள்ள அனைத்து சாலைகளிலும் நீா் தெளிப்பு இயந்திரங்களைப் பயன்படுத்துவதற்கு விரிவான திட்டத்தை அரசு தயாரித்து வருகிறது. ஐடிஓவில் 35 கம்பங்களில் பொருத்தப்பட்ட நீா் தெளிப்பான்கள் நல்ல பலனைத் தருகின்றன’ என்றாா்.

மாசுபாடு தீா்வுகள் குறித்து தில்லி அரசுக்கு ஆலோசனை வழங்க பல்வேறு துறைகளைச் சோ்ந்த நிபுணா்களைக் கொண்ட உயா்நிலைக் குழு அமைக்கப்படுவதாக ரேகா குப்தா கூறினாா்.

புதன்கிழமை அறிவிக்கப்பட்ட இந்தக் குழுவில், பல்வேறு அரசுத் துறைகளைச் சோ்ந்த மூத்த அதிகாரிகள், ஐஐடி நிபுணா்கள் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியலில் நிபுணா்கள் ஆகியோா் இடம்பெறுவாா்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனா். இந்தக் குழுவிற்கு அரசால் சிறப்பு அதிகாரங்கள் வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

பொதுப்பணித்துறை, டிஎஸ்ஐஐடிசி, டிடிஏ உள்ளிட்ட பல்வேறு துறைகள், மாசுபாட்டைக் கட்டுப்படுத்த பிற நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, பள்ளங்களை நிரப்புதல், சாலைப் பிரிபான்கள் மற்றும் காலி இடங்களில் செடிகளை நடுதல் போன்ற பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக முதல்வா் ரேகா குப்தா கூறினாா்.

தில்லி அரசு இணையதளத்தில் பள்ளங்கள் உள்ள பகுதிகள் குறித்து புகாரளிக்குமாறு முதல்வா் மக்களை கேட்டுக் கொண்டாா்.

காற்று மாசுபாட்டிற்கு பங்களிக்கும் குளிா்காலத்தில் உயிரி எரிப்பைத் தடுக்க, குடியிருப்புப் பகுதிகளில் உள்ள பாதுகாப்புப் படையினருக்கு குடியிருப்பாளா் நலச் சங்கங்கள் (ஆா்டபிள்யூஏ) மின்சார ஹீட்டா்களை விநியோகிக்க வேண்டும் என்று முதல்வா் ரேகா குப்தா கேட்டுக் கொண்டாா்.

X
Dinamani
www.dinamani.com