

புது தில்லி: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றும் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் இன்று கோஷம் எழுப்பினர்.
திமுக மக்களவை உறுப்பினர்களின் தொடர் முழக்கம் காரணமாக மக்களவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அறுபடை வீடுகளில் முதன்மையான தலமாக இருக்கும் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள பழமையான தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அனுமதி அளித்து உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை நடைமுறைப்படுத்துவதினால், சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்று கூறி, திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்து மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு, மலை உச்சியில் தீபம் ஏற்றவும் காவல்துறையினர் அனுமதி மறுத்துவிட்டனர்.
இதற்கிடையே, இந்த உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தீபத்தை ஏற்றவேண்டும் என்று மீண்டும் உத்தரவிடப்பட்டது.
இதற்கும் காவல்துறை மறுத்துவிட்டது, இதன் காரணமாக திருப்பரங்குன்றம் பகுதியில் அசாதாரண சூழல் ஏற்பட்டிருக்கிறது, இந்து அமைப்பினரும், பாஜகவினரும் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், திருப்பரங்குன்றம் பிரச்னையை நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று திமுக எம்பிக்கள் நோட்டீஸ் அளித்தனர்.
ஏற்கனவே நாடாளுமன்ற திமுக குழு தலைவர் கனிமொழி மற்றும் டி.ஆர். பாலு மக்களவையில் ஒத்திவைப்பு கடிதங்களை அளித்திருந்தார்கள். ஆனால், இந்த கோரிக்கையை அவைத் தலைவர் ஓம் பிர்லா ஏற்றுக்கொள்ளவில்லை. கடிதங்கள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதால் தொடர்ச்சியாக திமுக எம்.பி.க்கள் முழக்கங்கள் எழுப்பினர்.
மக்களவையின் அவைத் தலைவர் இருக்கைக்கு இரு பக்கங்களிலும் திமுக எம்.பி.க்கள் நின்றுகொண்டு முழக்கம் எழுப்பினர். இதனால் மக்களவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க.. மலைக்குன்றில் சிக்கிய 5 காவலர்கள்! உள்ளூர் இளைஞர்கள் உதவியோடு மீட்பு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.