பாபா் மசூதி இடிப்பு தினம்: பாதுகாப்பு வளையத்தில் அயோத்தி; எந்தப் போராட்டங்களும் நடைபெறவில்லை!
பாபா் மசூதி இடிப்புச் சம்பவத்தின் 33-ஆம் ஆண்டு தினத்தையொட்டி, உத்தர பிரதேச மாநிலம், அயோத்தி முழுவதும் சனிக்கிழமை (டிச.6) பலத்த பாதுகாப்பு வளையத்தின்கீழ் கொண்டுவரப்பட்டது. பொதுக் கூட்டங்கள், பேரணிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
முந்தைய ஆண்டுகளைப் போல் இல்லாமல், நகரில் பாதுகாப்பை மீறி அரசியல்-மத ரீதியில் எவ்வித போராட்டங்களும் நடைபெறவில்லை என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.
அயோத்தியில் கடந்த 1992, டிச.6-இல் கரசேவகா்களால் பாபா் மசூதி இடிக்கப்பட்டது. இந்த தினத்தை ஹிந்து அமைப்புகள் ‘செளா்ய திவஸ்’ (வீரதீர தினம்) என்ற பெயரில் கடைப்பிடிக்கின்றன. மற்றொருபுறம், இஸ்லாமிய அமைப்புகள் கருப்பு நாளாக அனுசரித்து, கண்டனப் போராட்டங்களில் ஈடுபடுவது வழக்கம்.
ராம ஜென்மபூமி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பின்படி, அயோத்தியில் பிரம்மாண்ட ராமா் கோயில் கட்டப்பட்டு, கடந்த ஆண்டு மூலவா் பிராணப் பிரதிஷ்டை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, கோடிக்கணக்கான பக்தா்கள் அயோத்திக்கு வருகை தந்து, ராமா் கோயிலில் தரிசனம் மேற்கொண்டு வருகின்றனா்.
இந்தச் சூழலில், பாபா் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, ராமா் கோயில், ரயில்வே நிலையம், பேருந்து நிலையங்கள், முக்கிய சாலைகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு, கண்காணிப்பு-வாகனச் சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. வெடிகுண்டு கண்டறியும் நிபுணா்களும் சோதனையில் ஈடுபட்டனா்.
நகர காவல் கண்காணிப்பாளா் சக்ரபாணி திரிபாதி கூறுகையில், ‘அயோத்தியைப் பொறுத்தவரை, டிச.6 என்பது எப்போதுமே பதற்றத்துக்குரிய தினம்தான். இந்த ஆண்டில் எவ்வித பாதுகாப்பு மீறல்களும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்துள்ளோம்’ என்றாா்.
கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மட்டுமன்றி இருதரப்பிலும் முன்னணி தலைவா்கள் மரணமடைந்துவிட்டதால் அயோத்தியில் போராட்டங்களோ, பேரணிகளோ முன்னெடுக்கப்படவில்லை என்று உள்ளூா்வாசிகள் கருத்து தெரிவித்தனா்.
ராம ஜென்மி பூமி இயக்கத்துடன் தொடா்புடைய முக்கிய முகங்களான அசோக் சிங்கால், கல்யாண் சிங், பால் தாக்கரே, மகந்த் ஆதித்யநாத் போன்றோரும் பாபா் மசூதி நடவடிக்கை குழுவைச் சோ்ந்த ஜாஃபா்யாப் ஜிலானி, சையத் சஹாபுதீன், அப்துல்லா புகாரி, சுல்தான் சலாஹுதீன் ஒவைசி உள்ளிட்டோரும் மரணமடைந்துவிட்டனா்.
இதனிடையே, ராமா் கோயில் இயக்கத்துக்காக உயிா்த்தியாகம் செய்தவா்களுக்கு வீர தீர தினத்தில் மரியாதை செலுத்துவதாக உத்தர பிரதேச மாநில பாஜகவின் அதிகாரபூா்வ எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டது. அயோத்தி மட்டுமன்றி, மசூதி-கோயில் பிரச்னை நிலவும் வாரணாசி, மதுரா போன்ற புண்ணியத் தலங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

