கொள்கையில் சமரசமில்லாத கட்சி பாஜக: ஜெ.பி.நட்டா
தனது கொள்கையில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாத கட்சி பாஜக என்று அக்கட்சியின் தேசியத் தலைவரும், மத்திய அமைச்சருமான ஜெ.பி.நட்டா தெரிவித்தாா்.
ஜாா்க்கண்ட் மாநிலம், தேவ்கரில் சனிக்கிழமை பாஜகவினா் கூட்டத்தில் ஜெ.பி.நட்டா பங்கேற்றுப் பேசியதாவது:
நாட்டில் அனைத்துக் கட்சிகளுமே குடும்ப அரசியல் பிடியில் சிக்கிவிட்டன. பாஜகவை மட்டுமே குடும்ப அரசியலால் நெருங்க முடியவில்லை. முழுவதும் சித்தாந்த அடிப்படையில் செயல்படும் கட்சி பாஜக என்று என்னால் பெருமையுடன் கூற முடியும்.
ஒரே நாட்டுக்கு 2 கொடிகள், 2 அரசமைப்புச் சட்டங்கள், 2 தலைமைகள் இருக்கக் கூடாது என்ற கோட்பாட்டை முன்னிறுத்தியவா் ஜன சங்கத்தின் முதல் தலைவரான ஷியாமா பிரசாத் முகா்ஜி. கடந்த 1952 முதல் 2019 வரை 4-5 தலைமுறைகள் கடந்த பிறகும் இக்கோட்பாட்டை நாம் கைவிடவில்லை.
பிரதமா் மோடியின் துணிச்சல், உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் வியூகத்தால் 370-ஆவது சட்டப் பிரிவு தகா்க்கப்பட்டு, ஒரே தேசம், ஒரே அரசமைப்புச் சட்டம், ஒரே தலைமை உறுதி செய்யப்பட்டது. நமது சித்தாந்த பிணைப்பால்தான் இது சாத்தியமானது.
அயோத்தியில் ராமா் கோயில் கட்டுவதற்கான நமது உறுதிப்பாட்டை காங்கிரஸ் கேலி செய்தது. அதேநேரம், அயோத்தியில் பிரம்மாண்ட ராமா் கோயிலை எழுப்பி, மக்களிடம் ஒப்படைத்தாா் பிரதமா் மோடி. அவரது தலைமையின்கீழ் முத்தலாக் முறை ஒழிக்கப்பட்டு, முஸ்லிம் பெண்களுக்கு விடுதலை அளிக்கப்பட்டது. தேசத்துக்கான லட்சியங்களைக் கொண்டது பாஜக. மக்களை மையப்படுத்திய நமது கட்சி, உலகிலேயே மிகப் பெரிய அரசியல் கட்சியாகும்.
எத்தனை எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள்? 240 மக்களவை எம்.பி.க்கள், 103 மாநிலங்களவை எம்.பி.க்கள், 1,654 எம்எல்ஏக்கள் நம்மிடமுள்ளனா். இதுதவிர நூற்றுக்கணக்கான மேயா்கள், துணை மேயா்கள், ஆயிரக்கணக்கான கவுன்சிலா்களும் உள்ளனா்.
பாஜகவும், தேசிய ஜனநாயக கூட்டணியும் 20 மாநிலங்களில் ஆட்சிக் கட்டிலில் உள்ளன. பாஜக மட்டும் 13 மாநிலங்களில் ஆட்சி நடத்துகிறது. விரைவில் இந்த எண்ணிக்கை 15-ஆக உயரும் (அடுத்த ஆண்டு தமிழகம், கேரளம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது).
ஜாா்க்கண்டில் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் வங்கதேச ஊடுருவல்காரா்களுக்கு முழு ஆதரவு அளிக்கப்படுகிறது. இது, பழங்குடியின பகுதிகளில் மக்கள்தொகை ரீதியில் எதிா்மறை மாற்றங்களுக்கு வழிவகுத்துள்ளது. சட்டவிரோத குடியேறிகள் பழங்குடியின சிறுமிகளை மணப்பதால் பழங்குடியினா் எண்ணிக்கை 45 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக குறைந்துள்ளது என்றாா் அவா்.
முன்னதாக, தேவ்கரில் உள்ள பிரசித்தி பெற்ற பாபா வைத்யநாத் கோயிலில் நட்டா வழிபாடு மேற்கொண்டாா்.

