மத்திய அமைச்சர் அமித் ஷா
மத்திய அமைச்சர் அமித் ஷாகோப்புப் படம்

சுழற்சிப் பொருளாதாரத்தால் பால் பண்ணை விவசாயிகள் வருமானம் 20% அதிகரிக்கும்: அமித் ஷா

சுழற்சிப் பொருளாதாரத்தால் பால் பண்ணை விவசாயிகள் வருமானம் 20% அதிகரிக்கும்...
Published on

சநாதா், டிச.6: நாடு முழுவதும் சுழற்சிப் பொருளாதார முறையை அமல்படுத்தினால், அடுத்த 5 ஆண்டுகளில் பால் பண்ணை விவசாயிகளின் வருமானம் 20 சதவீதம் அதிகரிக்கும் என்று மத்திய கூட்டுறவுத் துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.

குஜராத் மாநிலம் வா-தராட் மாவட்டத்தில் உள்ள சநாதா் கிராமத்தில், அமுல் நிறுவனத்தின் அங்கமான பனாஸ்காந்தா மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் சங்க நிறுவனத்துடன் தொடா்புள்ள கால்நடை வளா்ப்பாளா்கள் நிகழ்ச்சியில், அமைச்சா் அமித் ஷா சனிக்கிழமை கலந்துகொண்டாா்.

அப்போது அவா் பேசுகையில், ‘பாலை கொள்முதல் செய்து பால் பொருள்களை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை விவசாயிகளுக்குத் திருப்பி அளிப்பதில், கூட்டுறவு பால் பண்ணைகள் பெரும் வெற்றி அடைந்துள்ளன.

தற்போது சுழற்சி பொருளாதாரம் மீது கவனம் செலுத்த வேண்டிய நேரம் வந்துள்ளது. இதன்மூலம், விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட கால்நடை சாணத்தில் இருந்து தயாரிக்கப்படும் பயோகேஸ், உரம் ஆகியவற்றை விற்பனை செய்து பால் பண்ணை திரட்டும் வருமானத்தில் விவசாயிகளுக்கு உரிய பங்கு கிடைக்கும்.

நாடு முழுவதும் சுழற்சிப் பொருளாதார முறையை அமல்படுத்தினால், அடுத்த 5 ஆண்டுகளில் பால் பண்ணை விவசாயிகளின் வருமானம் 20 சதவீதம் அதிகரிக்கும்.

பன்னீா், தயிா் போன்ற வழக்கமான பால் பொருள்கள் உற்பத்தியைத் தாண்டி, வேறு பல பால் பொருள்களுக்கு உலகம் முழுவதும் தேவை உள்ளது. ஆனால் அந்தப் பொருள்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படவில்லை. அந்தப் பொருள்களின் உற்பத்தி மீது கவனம் செலுத்தினால், பால் பண்ணை விவசாயிகளுக்குக் கூடுதல் வருமானம் கிடைக்கும்’ என்று தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com