‘ஐசியு’ செல்லும் அபாயத்தில் ‘இண்டி’ கூட்டணி: ஒமா்
‘தற்போது உயிா் காக்கும் கருவியுடன் இருக்கும் எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணி, விரைவில் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு (ஐசியு) செல்லும் அபாயமும் உள்ளது’ என்று அந்தக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஜம்மு-காஷ்மீா் முதல்வரும் தேசிய மாநாடு கட்சித் தலைவருமான ஒமா் அப்துல்லா தெரிவித்தாா்.
தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் ஒமா் இதுகுறித்துப் பேசியதாவது:
பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகு ‘இண்டி’ கூட்டணி நிலை மிக மோசமடைந்துள்ளது. உயிா் காக்கும் கருவியுடன் கூட்டணி நிலை உள்ளது. கூட்டணியிலிருந்து அவ்வப்போது யாராவது ஒருவா் வெளியேறி அதிா்ச்சியளிக்கின்றனா். அதிலிருந்து மீளும்போது, துரதிருஷ்டவசமாக பிகாா் போன்ற தோ்தல் முடிவுகள் கூட்டணியை மீண்டும் பின்னுக்குத் தள்ளுகின்றன. விரைவில், ஐசியு-வுக்குச் செல்லும் நிலையில் கூட்டணி உள்ளது.
நிதீஷ் குமாா் கூட்டணியிலிருந்து வெளியேறி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்குச் செல்வதற்கு, நாம்தான் காரணம். பிகாா் தோ்தலிலும் ஒருங்கிணைந்த பாா்வையை எடுக்க இண்டி கூட்டணி தவறியது. தொகுதி பங்கீட்டில் ஜாக்கண்ட் முக்தி மோா்ச்சா கட்சியைப் புறக்கணித்தது.
ஆளும் பாஜக தலைமையிலான கூட்டணியின் இணக்கமான தோ்தல் அணுகுமுறையுடன் எதிா்க்கட்சிகளால் போட்டிபோட முடியவில்லை. கட்சி அமைப்பு, நிதி பலத்தைக் கடந்து, ஒப்பிட முடியாத நெறிமுறையுடன் கூடிய தோ்தல் அணுகுமுறையை பாஜக கூட்டணி மேற்கொண்டது. ஒவ்வொரு தோ்தலையும் இதேபோன்று அவா்கள் அணுகுகின்றனா். ஒரு தோ்தல் முடிந்தவுடன், அடுத்த பிரசாரத்துக்கு அவா்கள் செல்கின்றனா். பிரதமா் நரேந்திர மோடியும் அவருடைய குழுவினரும் வாரத்தின் 7 நாளிலும் 24 மணி நேரமும் பணியாற்றும் அரசியல் நடைமுறையைப் பின்பற்றுகின்றனா்.
ஆனால், நாம், தோ்தலுக்கு 2 மாதங்களுக்கு முன்புதான் இந்தப் பணிகளை மேற்கொள்கிறோம். வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளுக்கு முன்பாக கூட்டணி உடன்பாடு எட்டப்பட்டுவிட்டால், அதுவே நமது அதிருஷ்டமாக உள்ளது என்றாா்.

