

தேசிய தலைநகர் தில்லியில் காற்றின் தரம் மிகவும் மோசம் பிரிவில் நீடிப்பதோடு, நச்சுப் புகை மண்டலம் தொடர்ந்து காணப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தகவலின்படி,
தில்லியின் நச்சுப்புகை மண்டலம் காணப்படுவதாகவும் காற்றின் தரக்குறியீடு இன்று காலை 9 மணி நிலவரப்படி 335 ஆகவும் பதிவாகியுள்ளது. தலைநகர் முழுவதும் உள்ள 36 கண்காணிப்பு நிலையங்களும் மிகவும் மோசம் பிரிவிலேயே காற்றின் தரம் பதிவு செய்துள்ளனர். அதிலும் முண்ட்காவில் இன்று காலை நிலவரப்படி 387 ஆகப் பதிவானது. இது மாசு அளவை அதிகம் குறிப்பதாகும்.
சிபிசிபியின் தகவலின் 0 முதல் 50 வரையிலான காற்றின் தரக் குறியீடு நல்லது, 51 முதல் 100 வரை திருப்தி, 101 முதல் 200 வரை மிதமானது, 201 முதல் 300 வரை மோசம், 301 முதல் 400 வரை மிகவும் மோசம் மற்றும் 401 முதல் 500 வரை கடுமையானது என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
தில்லியின் காற்றின் தரம் நாளுக்குநாள் உயர்ந்து வருகின்றது. ஞாயிற்றுக்கிழமை நகரத்தின் காற்றின் தரக் குறியீடு 279 ஆகவும், திங்கள்கிழமை 304 ஆகவும், செவ்வாய்க்கிழமை 372 ஆகவும், புதன்கிழமை 342 ஆகவும் பதிவாகியுள்ளது.
வியாழக்கிழமை நகரின் காற்றின் தரக் குறியீடு 304 ஆகவும், வெள்ளிக்கிழமை 327 ஆகவும் மிகவும் மோசம் பிரிவில் இருந்தது. இதற்கிடையில், குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2.7 டிகிரி செல்சியஸ் குறைவாக 6.8 டிகிரி செல்சியஸாகவும், ஈரப்பதம் 95 சதவீதமாகவும் இருந்தது.
இந்திய வானிலை மையத்தின்படி ஓரளவு மேகமூட்டமான வானத்தின் கீழ் அதிகபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை எட்டக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
இதனிடையே தில்லியில் அதிகரித்துவரும் காற்று மாசு பிரச்சினையைக் குறைக்கச் செயற்கை மழையைப் பொழியச் செய்வதற்கான சோதனை முயற்சி அண்மையில் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அந்த திட்டம் தோல்வியில் முடிந்ததாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.