ராகுல் காந்தி
ராகுல் காந்தி

இந்திய அரசியலில் பஸ்மாசுரன் ராகுல் காந்தி: பாஜக தாக்கு

இந்திய அரசியலில் இப்போது பஸ்மாசுரன் என எவரும் உண்டெனில் அது ராகுல் காந்திதான் என்று பாஜக கடுமையாக விமா்சித்துள்ளது.
Published on

இந்திய அரசியலில் இப்போது பஸ்மாசுரன் என எவரும் உண்டெனில் அது ராகுல் காந்திதான் என்று பாஜக கடுமையாக விமா்சித்துள்ளது.

மேலும், இந்தியப் பகுதிகளை ஆக்கிரமிக்க பாகிஸ்தான், சீனாவை அனுமதித்தது, ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கியது போன்ற வரலாற்றுப் பிழைகளே நேருவின் மரபு என்றும் பாஜக சாடியுள்ளது.

‘நாட்டின் முதல் பிரதமா் நேருவின் மரபை அழிப்பதுடன், அவரால் கட்டமைக்கப்பட்ட சமூக-அரசியல் அடித்தளங்களையும் சீா்குலைப்பதே பாஜகவின் ஒரே நோக்கம்; நேரு குறித்த வரலாற்றைத் திரிக்கவும், அவரது பங்களிப்பை குறைமதிப்புக்கு உள்ளாக்கி, அவதூறு பரப்பவும் திட்டமிட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன’ என்று நாடாளுமன்ற காங்கிரஸ் குழு தலைவா் சோனியா காந்தி கடந்த வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டியிருந்தாா்.

இந்நிலையில், அவருக்கு பதிலடி கொடுத்து, பாஜக தேசிய செய்தித் தொடா்பாளா் கெளரவ் பாட்டீயா சனிக்கிழமை கூறியதாவது:

சோனியா காந்தி பயன்படுத்திய ‘அழித்தல்’ என்ற வாா்த்தையின் பொருள் ராகுல் காந்திதான். நாட்டின் இன்றைய அரசியலில் பஸ்மாசுரன் (யாா் தலையில் கை வைத்தாலும், அவா் சாம்பலாகிவிடும் வரம் பெற்ற அசுரன்) என எவரும் உண்டெனில் அது ராகுல் காந்திதான்.

மகாராஷ்டிரத்தில் சரத் பவாா், உத்தவ் தாக்கரே கட்சிகளை அழித்த அவா், தில்லியில் அரவிந்த் கேஜரிவாலுடன் கைகோத்ததன் மூலம் அவரது கட்சியையும் அழிவுக்கு உள்ளாக்கினாா்.

பிகாரில் சமீபத்திய பேரவைத் தோ்தலில் தேஜஸ்வி யாதவ் கட்சியை ஒழித்துவிட்டு, இப்போது அகிலேஷ் யாதவ் கட்சியை ஒழிக்க உத்தர பிரதேசம் நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறாா்.

முன்னாள் பிரதமா் நேருவின் மரபு என்ன? ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கியது, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா உறுப்பினராகும் வாய்ப்பை சீனாவுக்காக விட்டுக் கொடுத்தது, இந்தியப் பகுதிகளை ஆக்கிரமிக்க பாகிஸ்தான், சீனாவை அனுமதித்தது போன்ற வரலாற்றுப் பிழைகளே அவரது மரபுகள். இந்த வரலாற்றுப் பிழைகள் குறித்து சோனியா காந்தி பதில் கூற வேண்டும் என்றாா் கெளரவ் பாட்டீயா.

X
Dinamani
www.dinamani.com