

நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பயணிகளின் நலன் கருதி சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
விமானப் பணி மற்றும் விமானப் பணியாளர்களுக்கான பணி நேரம் உள்ளிட்ட புதிய விதிமுறைகள் காரணமாக, இண்டிகோ விமான நிறுவனத்தின் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நேற்று 1000க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், இன்றும் அதே நிலை நீடிக்கிறது.
விமான நிலையங்களில் ஏராளமான பயணிகள் செய்வதறியாது கலங்கி நிற்கும் நிலையில், அவர்களின் நலனுக்காக சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இன்று அறிவித்துள்ளது.
சென்னை எழும்பூரிலிருந்து தெலங்கானாவின் சர்லபள்ளி பகுதிக்கும் செகுந்தராபாத்திலிருந்து சென்னை எழும்பூருக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை எழும்பூரிலிருந்து ரயில் எண் 06019, சனிக்கிழமை 23.55 மணிக்குப் புறப்பட்டு சர்லபள்ளியை டிச.7ஆம் தேதி 14.00 மணிக்குச் சென்றடையும்.
இதே ரயில் மறுவழித்தடத்தில் 06020, சர்லபள்ளியிலிருந்து டிச.7ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 18.00 மணிக்குப் புறப்பட்டு திங்கள்கிழமை 08.30 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கூட்ட நெரிசலைக் குறைக்க சில தேர்ந்தெடுக்கப்பட்ட நீண்ட தூர ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பது அதிகரிப்பதாகவும் அறிவித்துள்ளது.
அதாவது டிசம்பர் 6 முதல் டிசம்பர் 10 வரையிலான நாள்களுக்கு திருச்சி - ஜோத்பூர் ஹம்சஃபர் எக்ஸ்பிரஸ், டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - திருவனந்தபுரம் சென்ட்ரல் சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் மற்றும் மும்பை சிஎஸ்டி - சென்னை கடற்கரை சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்களில் கூடுதலாக ஒரு ஏசி மூன்று அடுக்கு பெட்டி இணைக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.