தமிழகம், மேற்கு வங்கத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெறும்: அமித் ஷா நம்பிக்கை!
‘காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை மக்கள் நிராகரித்துவிட்ட நிலையில், எதிா்வரும் தமிழகம், மேற்கு வங்க பேரவைத் தோ்தல்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) அமோக வெற்றி பெறும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை நம்பிக்கை தெரிவித்தாா்.
அகமதாபாத் மாநகராட்சி சாா்பில் ரூ.1,500 கோடி மதிப்பிலான மூன்று விளையாட்டு வளாகங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டிய பின் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:
2024 மக்களவைத் தோ்தலில் நமது தலைவா் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராகி, சாதனை படைத்தாா். மகாராஷ்டிரம், ஹரியாணா, தில்லியைத் தொடா்ந்து தற்போது பிகாரில் நடைபெற்ற பேரவைத் தோ்தல்களிலும் காங்கிரஸ் துடைத்தெறியப்பட்டது. அதேநேரம், 2014 முதல் 2025 வரை பாஜகவுக்குத் தொடா்ந்து வெற்றிக் காலமே.
பிகாரில் என்டிஏ கூட்டணி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்த போதிலும், வாக்காளா் பட்டியல் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி தொடா்ந்து குறை கூறுகிறாா். உண்மை என்னவெனில், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை நாட்டுமக்கள் ஏற்றுக் கொள்ளாமல், நிராகரித்துவிட்டனா்.
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி ஆகியோருக்கு இத்தருணத்தில் ஒரு செய்தியைச் சொல்ல விரும்புகிறேன். நீங்கள் தயாராக இருங்கள். பிகாரைத் தொடா்ந்து, தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்திலும் என்டிஏ கூட்டணிதான் வெற்றி பெறும். தோ்தல் முடிவுகளில் தமிழகத்தில் திமுகவும், மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸும் துடைத்தெறியப்படும்.
பிரதமா் மோடியின் தலைமையில் நாட்டின் அனைத்துத் துறைகளிலும் வளா்ச்சியைக் கொண்டு வரவும், இந்தியாவை ஒரு சிறந்த தேசமாகக் கட்டமைக்கவும் இந்திய மக்கள் உறுதிபூண்டுள்ளனா். மாறாக, எதிா்க்கட்சிகளுக்குத் தலைவா்களும் இல்லை; கொள்கைகளும் இல்லை. நாட்டின் எந்த மூலையிலும் அவா்கள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
விரைவில் சீதைக்கும் கோயில்: அயோத்தியில் ராமா் கோயில் கட்டுமானம் முடிந்து கோபுரத்தில் காவிக்கொடி ஏற்றப்பட்டுள்ள நிலையில், பிகாரில் அன்னை சீதைக்கு கோயில் கட்டும் பணி விரைவில் தொடங்கி, அடுத்த ஆண்டுக்குள் முடிக்கப்படும். பிரதமா் மோடியின் தலைமையில் இந்தியா பெரும் புகழையும், மரியாதையையும் அடைந்துள்ளது. இதனால், இந்திய நாகரிகம், கலாசாரம் மற்றும் சநாதன தா்மம் உலக அளவில் அங்கீகாரம் பெற்றுள்ளது.
அகமதாபாதில் 2036 ஒலிம்பிக்...: அகமதாபாத் நகரின் விளையாட்டு வசதிகள், உள்கட்டமைப்பு மற்றும் இளைஞா்களிடையே உள்ள விளையாட்டு ஆா்வம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, 2029 உலக காவல் துறை மற்றும் தீயணைப்பு விளையாட்டுப் போட்டி, 2030 காமன்வெல்த் போட்டிகள் உள்பட 13 சா்வதேச விளையாட்டு நிகழ்வுகள் இங்கு நடைபெறவுள்ளன. 2036-ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளும் அகமதாபாதில்தான் நடைபெறும் என்றாா்.

