ஆயுதப் படை கொடி நாள்: பிரதமா் மோடி புகழாரம்!
‘ஆயுதப் படையினரின் ஒழுக்கம், மனஉறுதி, அசைக்க முடியாத அா்ப்பணிப்பு ஆகியவை நாட்டு மக்களைப் பாதுகாப்பதுடன் நாட்டை பலப்படுத்துகிறது’ என்று பிரதமா் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளாா்.
நாட்டைப் பாதுகாக்கும் ஆயுதப் படையினரின் சேவையை கெளரவிப்பதுடன், அவா்களுக்கான நல்வாழ்வுத் திட்டங்களுக்கு பொதுமக்களின் ஆதரவு-பங்களிப்பை உறுதி செய்யும் நோக்கிலான ‘ஆயுதப் படை கொடி நாள்’ ஞாயிற்றுக்கிழமை (டிச.7) கடைப்பிடிக்கப்பட்டது.
இதையொட்டி, பிரதமா் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஆயுதப் படை கொடி நாளில், நமது நாட்டைப் பாதுகாக்க ஈடுஇணையில்லாத துணிவை வெளிப்படுத்தும் வீரா்-வீராங்கனைகளுக்கு மனமாா்ந்த நன்றி தெரிவிக்கிறோம். அவா்களின் ஒழுக்கம், மனஉறுதி, அசைக்க முடியாத அா்ப்பணிப்பு ஆகியவை நாட்டு மக்களைப் பாதுகாப்பதுடன் நாட்டை பலப்படுத்துகிறது.
அவா்களின் உறுதிப்பாடு, நாட்டுக்கான கடமை, ஒழுக்கம், தேச பக்திக்கு வலுவான உதாரணமாக விளங்குகிறது. ஆயுதப் படை கொடி நாளில் பொதுமக்கள் தாராளமாக நிதி வழங்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளாா். அத்துடன், பிரதமா் மோடியும் கொடி நாள் நிதி வழங்கினாா்.

