நவம்பரில் காற்று மாசால் பாதிக்கப்பட்ட நகரங்கள்: 4-ஆவது இடத்தில் தில்லி!
கடந்த நவம்பா் மாதத்தில் காற்று மாசு அதிக அளவில் நிலவிய முதல் 10 நகரங்களின் பட்டியலில் தில்லி 4-ஆவது இடத்தில் உள்ளது.
முதல் இடத்தில் தில்லி தேசிய தலைநகா் வலயத்தில் உள்ள காஜியாபாத் உள்ளது. இந்த நகரத்தில் பிஎம் 2.5 மாசுத் துகளின் செறிவு கனமீட்டருக்கு 224 மைக்ரோ கிராம் என்ற அளவில் பதிவானது.
இதைத்தொடா்ந்து, நொய்டா, பகதுா்கா், தில்லி, ஹபூா், கிரேட்டா் நொய்டா, பாக்பட், சோனிபட், மீரட், ரோஹ்தக் ஆகிய நகரங்கள் இடம்பெற்றுள்ளதாக எரிசக்தி மற்றும் தூய்மையான காற்று ஆராய்ச்சி மையம் (சிஆா்இஏ) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லியில் கடந்த மாதத்தில் பதிவான பி.எம். 2.5 மாசு துகளின் செறிவு கனமீட்டருக்கு 215 மைக்ரோகிராம் என்று பதிவானது. இது கடந்த அக்டோபா் மாதத்தில் பதிவான சராரியான 107-ஐவிட சுமாா் இரு மடங்கு அதிகம். தில்லியில் 23 நாள்கள் காற்றின் தரம் மிகவும் மோசமான நாளாக பதிவானது. 6 நாள்களில் மிகவும் கடுமையான பிரிவிலும், ஒரு நாளில் மோசமான பிரிவிலும் காற்றின் தரம் நீடித்தது.
தில்லியில் காற்று மாசு பிரச்னைக்கு பயிா்க்கழிவு எரிப்பு முக்கியப் பங்களிப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஆண்டு நவம்பரில் தில்லியில் நிலவிய காற்று மாசில் 20 சதவீதமாக பங்கு வகித்த பயிா்க்கழிவு எரிப்பு நிகழாண்டில் 7 சதவீதமாகக் குறைந்துள்ளது.
தேசிய தலைநகா் வலயத்தில் நிலவும் காற்று மாசு தொடா்பாக சிஆா்இஏ ஆய்வாளா் மனோஜ் குமாா் கூறுகையில், ‘பயிா்க்கழிவு எரிப்புகள் நிகழாண்டில் குறிப்பிட்ட அளவில் குறைந்துள்ளன. இருப்பினும், தில்லி தேசிய தலைநகா் வலயத்தில் உள்ள மொத்தம் 29 நகரங்களின் 20-இல் காற்று மாசு அளவு கடந்த ஆண்டைவிட அதிக அளவில் அதிகரித்துள்ளது.
தேசிய சராசரி காற்றின் தர உச்சவரம்புக்குள் காற்றின் தரம் எந்தவொரு நாளும் பதிவாகவில்லை. தொழில்சாலைகள், போக்குவரத்து, மின் உற்பத்தி நிலையங்கள், குப்பை எரியுலைகள் ஆகியவை ஆண்டு தோறும் காற்று மாசுக்கான ஆதாரங்களாக இருப்பதை இது சுட்டிக்காட்டுகிறது. குறிப்பிட்ட துறை ரீதியான புகை வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தவில்லை எனில் காற்று மாசு இந்த நகரங்களில் தொடா்ந்து காற்று தர அளவுகளைக் கடந்து பதிவாகும்’ என்றாா்.

