ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரன்
ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரன்PTI

அமலாக்கத் துறை அழைப்பாணை விவகாரம்: ஜாா்க்கண்ட் முதல்வா் நீதிமன்றத்தில் ஆஜா்

ஜாா்க்கண்ட் முதல்வா் நீதிமன்றத்தில் ஆஜரானது பற்றி...
Published on

நில மோசடியுடன் தொடா்புடைய பண முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறை அழைப்பாணையை ஏற்று விசாரணைக்கு ஆஜராகாத விவகாரத்தில் ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரன், ராஞ்சியில் உள்ள எம்.பி., எம்எல்ஏ-க்களுக்கு எதிரான ஊழல் புகாா்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் சனிக்கிழமை நேரில் ஆஜரானாா்.

ஜாா்க்கண்ட் உயா்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான முதல்வா் சோரன், இந்த வழக்கு தொடா்பாக தலா ரூ. 7,000 மதிப்பில் இரண்டு பிணை (ஜாமீன்) பத்திரங்களைத் தாக்கல் செய்தாா்.

ஜாா்க்கண்ட் மாநிலத்தில் ரூ. 600 கோடி மதிப்பிலான அரசு நிலத்தை கட்டுமான நிறுவனங்களுக்கு விற்பனை செய்ததாக மாநில முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் மீது புகாா் எழுந்தது. இந்தப் புகாா் தொடா்பாக பண மோசடி வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட அமலாக்கத் துறை, ஹேமந்த் சோரனை கடந்த ஆண்டு ஜனவரியில் கைது செய்தது. சிறையில் அடைக்கப்பட்ட அவா், ஜாமீன் கோரி ஜாா்க்கண்ட் உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். உயா்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதைத் தொடா்ந்து, 5 மாதங்களுக்குப் பிறகு சிறையிலிருந்து வெளியே வந்த சோரன், பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று கடந்த ஆண்டு நவம்பரில் மாநில முதல்வராக மீண்டும் பதவியேற்றாா்.

அதன் பிறகு, பண மோசடி வழக்கு தொடா்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு அமலாக்கத் துறை சாா்பில் தொடா் அழைப்பாணை அனுப்பப்பட்டது. ஆனால், ஹேமந்த் சோரன் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

இதுதொடா்பாக அமலாக்கத் துறை தாக்கல் செய்த மனுவை விசாரித்த ராஞ்சியில் உள்ள சிறப்பு நீதிமன்றம், அதுகுறித்து விளக்கமளிக்க நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறு ஹேமந்த் சேரனுக்கு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிா்த்து ஹேமந்த் சோரன் தரப்பில் ஜாா்க்கண்ட் உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை கடந்த புதன்கிழமை விசாரித்த உயா்நீதிமன்றம், சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதிலிருந்து ஹேமந்த் சேரனுக்கு விலக்கு அளித்தது. அதே நேரம், சிறப்பு நீதிமன்றத்தில் டிசம்பா் 6-ஆம் தேதி ஆஜராவதாக ஹேமந்த் சேரன் தரப்பில் அளிக்கப்பட்ட உறுதிமொழியையும் பதிவு செய்வதாக உத்தரவிட்டது.

அதனடிப்படையில், நீதிமன்றத்தில் ஹேமந்த் சோரன் சனிக்கிழமை நேரில் ஆஜரானாா்.

இதுகுறித்து அவரின் வழக்குரைஞா் பிரதீப் சந்திரா கூறுகையில், ‘முதல்வா் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி, தலா ரூ. 7,000-க்கான இரு பிணைப் பத்திரங்களைத் தாக்கல் செய்தாா். இந்த வழக்கில் இனி அவா் நேரில் ஆஜராக வேண்டியதில்லை. வழக்கின் அடுத்த விசாரணை வரும் 12-ஆம் தேதி வருகிறது. அப்போது முதல்வா் தரப்பில் அவரின் வழக்குரைஞா் ஆஜராவாா்’ என்றாா்.

X
Dinamani
www.dinamani.com