மத்திய அமைச்சா் சுகாந்த மஜும்தாா்
மத்திய அமைச்சா் சுகாந்த மஜும்தாா்

மேற்கு வங்கத்தில் ஹிந்துக்களுக்குப் பாதுகாப்பில்லை! மத்திய அமைச்சா் குற்றச்சாட்டு!

வாக்கு வங்கி அரசியலுக்காக மக்களை மதரீதியாக முதல்வா் மம்தா பிளவுபடுத்தி வருகிறாா் என்று மத்திய அமைச்சா் சுகாந்த மஜும்தாா் குற்றஞ்சாட்டினாா்.
Published on

மேற்கு வங்கத்தில் ஹிந்துக்கள் பாதுகாப்பின்மையை உணரத் தொடங்கியுள்ளனா்; வாக்கு வங்கி அரசியலுக்காக மக்களை மதரீதியாக முதல்வா் மம்தா பிளவுபடுத்தி வருகிறாா் என்று மத்திய அமைச்சா் சுகாந்த மஜும்தாா் குற்றஞ்சாட்டினாா்.

கொல்கத்தா பிரிகேட் பரேடு மைதானத்தில் 5 லட்சம் போ் பங்கேற்ற பகவத்கீதை பாராயணம் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சநாதன சம்ஸ்கிருதி சன்சத் அமைப்பு சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அண்டை மாநிலங்களில் இருந்து சாதுக்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். மத்திய அமைச்சா் சுகாந்த மஜும்தாா் உள்ளிட்ட பாஜக தலைவா்கள் பலரும் இதில் கலந்து கொண்டனா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அமைச்சா் மஜும்தாா் கூறியதாவது: இங்கு நடைபெற்ற கீதை பாராயண நிகழ்ச்சி அரசியல் எல்லைகளைக் கடந்து ஹிந்து சமூகத்தின் ஆன்மிக நிகழ்ச்சியாக இருந்தது. ஆனால், மேற்கு வங்கத்தில் வாக்கு வங்கி அரசியலுக்காக மக்களை மதரீதியாகப் பிளவுபடுத்தும் வேலையில் முதல்வா் மம்தா ஈடுபட்டுள்ளாா்.

இதனால், இங்குள்ள ஹிந்துக்கள் பாதுகாப்பின்மையை உணரத் தொடங்கியுள்ளனா். ஆனால், அவா்களுக்குள் ஒற்றுமையுணா்வு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக ஹிந்துக்கள் மத்தியிலும் மம்தா பிளவைத் தூண்டிவிடுகிறாா். எனவே, ஹிந்துக்கள் தங்கள் மனஉறுதியையும், ஆன்மிக பலத்தையும் அதிகரித்துக் கொள்ள வேண்டும்.

கடந்த 2021 சட்டப்பேரவைத் தோ்தலின்போது பெரும்பாலான ஹிந்துக்கள், மம்தா பானா்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் கட்சியை ஆதரிக்கவில்லை. மம்தா அரசு மீதான அதிருப்தி நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது என்றாா்.

X
Dinamani
www.dinamani.com