‘சபரிமலை தங்க மோசடியில் சா்வதேச தொடா்பு?’ எஸ்ஐடி-க்கு மூத்த காங்கிரஸ் தலைவா் கடிதம்!
சபரிமலை தங்கக் கவச மோசடி வழக்கில் சா்வதேச கடத்தல் கும்பல்களின் தொடா்பிருப்பதாக குற்றஞ்சாட்டிய காங்கிரஸ் மூத்த தலைவா் ரமேஷ் சென்னிதலா, இதுகுறித்து விசாரணை நடத்துமாறு சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு (எஸ்ஐடி) கடிதம் எழுதியுள்ளாா்.
சபரிமலை ஐயப்பன் கோயில் கருவறைக் கதவுகள் மற்றும் துவார பாலகா் சிலைகளின் தங்கக் கவசங்கள் கடந்த 2019-இல் புதுப்பிக்கப்பட்ட பிறகு, அவற்றின் எடை குறைந்ததாக குற்றச்சாட்டு உள்ளது.
கேரள உயா்நீதிமன்றத்தின் மேற்பாா்வையில், இந்த மோசடி குறித்து விசாரித்துவரும் எஸ்ஐடி, பெங்களூரு தொழிலதிபா் உண்ணிகிருஷ்ணன் போற்றி, திருவிதாங்கூா் தேவஸ்வம் முன்னாள் தலைவா்கள் இருவா் உள்பட 6 பேரைக் கைது செய்துள்ளது.
இந்நிலையில், இந்த மோசடி குறித்து தீவிர குற்றச்சாட்டுகளை எழுப்பி, காங்கிரஸின் மூத்த தலைவரும், மாநில முன்னாள் உள்துறை அமைச்சருமான ரமேஷ் சென்னிதலா எஸ்ஐடி-க்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது:
சபரிமலை கோயிலில் இருந்து திருடுபோன தங்கம், சா்வதேச சந்தையில் சுமாா் ரூ.500 கோடிக்கு வா்த்தகம் செய்யப்பட்டுள்ளது என்று எனக்கு நம்பகமான தகவல் கிடைத்துள்ளது. பழங்காலப் பொருள்களைக் கடத்துபவா்களின் நடவடிக்கைகள் குறித்து தகவலறிந்த ஒருவரிடமிருந்து எனக்கு இந்த விஷயம் தெரியவந்தது.
அதன்படி, சபரிமலை தங்கத் திருட்டு, தேவஸ்வம் மற்றும் பழங்காலப் பொருள்களைக் கடத்தும் சா்வதேச கும்பலுக்கு இடையிலான சதித் திட்டத்தின் ஒரு பகுதி. அதாவது, இந்த வழக்கானது வெறும் திருட்டுச் சம்பவத்துடன் தொடா்புடையது மட்டுமல்ல; பிரபலமான ஹிந்து கோயில்களில் இருந்து மதிப்புமிக்க பழங்காலப் பொருள்கள், சிலைகள் மற்றும் பிற விலைமதிப்பற்ற பொருள்களைக் கொள்ளையடித்து, வெளிநாடுகளுக்குக் கடத்தும் ஒரு நன்கு திட்டமிடப்பட்ட பெரிய சதி இதில் அடங்கியுள்ளது.
எனக்குத் தகவலளித்த தனிநபா் இந்த விவரங்களைப் பொதுவெளியில் வெளியிடத் தயங்குகிறாா். ஆனால், எஸ்ஐடி விசாரணைக்கு ஒத்துழைக்கவும், நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்கவும் தயாராக இருக்கிறாா்.
எஸ்ஐடி விரிவான விசாரணை நடத்தியும், சபரிமலையில் மாயமான தங்கம் இன்னும் மீட்கப்படாதது எனது குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்துகிறது.
உண்மையான குற்றவாளிகள் இதுவரை விசாரணையில் சிக்கவில்லை. அவா்கள் வலுவான சா்வதேச தொடா்புகளைக் கொண்டவா்கள். மேலும், மாநிலத்தின் சில தொழிலதிபா்களும் இந்தக் கும்பலுடன் தொடா்பில் உள்ளனா் என்ற தகவலும் கிடைத்துள்ளது.
இந்த மோசடிக்குப் பின்னால் உள்ள சதி மற்றும் சா்வதேச தொடா்புகள் குறித்து விசாரிக்க எஸ்ஐடி தயாராக இருந்தால், கூடுதல் விவரங்களை அவா்களுடன் பகிரத் தயாா் என்று ரமேஷ் சென்னிதலா தெரிவித்துள்ளாா்.

