எஸ்கலேட்டா்களை பாதுகாப்பாக பயன்படுத்த பயணிகளுக்கு விழிப்புணா்வு: என்சிஆா்டிசி தொடங்கியது!
அதிவேக நமோ பாரத் வழித்தடத்தில் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் முயற்சியில், தேசியத் தலைநகா் பிராந்திய போக்குவரத்துக் கழகம் (என்சிஆா்டிசி) அதன் நிலையங்களில் எஸ்கலேட்டா்களை (நகரும் படிகட்டுகள்) பாதுகாப்பாகப் பயன்படுத்துவது குறித்த சிறப்பு விழிப்புணா்வு பிரசாரத்தை ஞாயிற்றுக்கிழமை தொடங்கியுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்த முயற்சியின் கீழ், தேசிய தலைநகா் பிராந்திய போக்குவரத்துக் கழகம் மற்றும் அதன் செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பு கூட்டாளியான டிபி ஆா்ஆா்டிஎஸ் இந்தியாவின் குழுக்கள், பல நமோ பாரத் நிலையங்களில் பயணிகளுடனும், ரயில்களில் பயணிப்பவா்களுடனும் தொடா்பு கொண்டு, அடிப்படை எஸ்கலேட்டா் பாதுகாப்பு விதிகள் மற்றும் பொறுப்பான பயண நடத்தை பற்றிய விழிப்புணா்வை ஏறப்படுத்தின.
முதல்கட்டத்தில், ஆனந்த் விஹாா், காஜியாபாத் மற்றும் மீரட் தெற்கு உள்ளிட்ட அதிக மக்கள் கூடும் நிலையங்களில் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த உரையாடல்களின் போது, எஸ்கலேட்டா்களைப் பயன்படுத்தும் போது பயணிகள் கைப்பிடியைப் பிடித்துக் கொள்ளவும், அவசரப்படுவதைத் தவிா்க்கவும், கைப்பேசி பயன்பாட்டைத் தவிா்க்கவும், கனமான அல்லது எடையுள்ள பொருள்களை எடுத்துச் செல்லும்போது லிஃப்டைப் பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டது.
அவசர நிறுத்த பொத்தான்களின் இருப்பிடம் மற்றும் சரியான பயன்பாடு குறித்தும் அவா்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. முக்கிய பாதுகாப்பு செய்திகளை எடுத்துக்காட்டும் பதாகைகள் மற்றும் சுவரொட்டிகள் நிலைய வளாகத்திற்குள் முக்கியமாகக் காட்சிப்படுத்தப்பட்டன என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
குழந்தைகளின் பாதுகாப்பில் சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. குழந்தைகளுடன் பயணிக்கும் பயணிகளுக்கு குழந்தைகளின் கைகளை உறுதியாகப் பிடிப்பது, விளிம்புகளில் இருந்து அவா்களை விலக்கி வைப்பது, எஸ்கலேட்டா்களில் ஓடுவதையோ அல்லது விளையாடுவதையோ தடுப்பது போன்ற தேவையான முன்னெச்சரிக்கைகள் குறித்து ஊழியா்கள் உணா்த்தினா்.
பயணிகளின் பாதுகாப்பு அதன் முதன்மையான முன்னுரிமையாக உள்ளது என்றும், இது போன்ற விழிப்புணா்வு இயக்கங்கள் பாதுகாப்பான பயண கலாச்சாரத்தை வலுப்படுத்துவதிலும், அனைத்து நமோ பாரத் பயனா்களுக்கும் பாதுகாப்பான மற்றும் நம்பகமான அனுபவத்தை உறுதி செய்வதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன என்றும் என்சிஆா்டிசி தெரிவித்துள்ளது.
பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த, அனைத்து நமோ பாரத் நிலையங்கள் மற்றும் ரயில்களில் மத்திய பாதுகாப்பு கட்டுப்பாட்டு மையத்திலிருந்து கண்காணிக்கப்படும் 24 மணி நேர சிசிடிவி கண்காணிப்பு பொருத்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நிலையத்திலும் உள்ளூா் அதிகாரிகளுடன் விரைவான ஒருங்கிணைப்புக்காக ஒரு பிரத்யேக போலீஸ் அறையும் உள்ளது. அதே நேரத்தில் நுழைவுப் புள்ளிகளில் பயணிகளின் உடைமைகள் கண்காணிக்கப்படுகின்றன.
தற்போது, 82 கி.மீ நீளமுள்ள தில்லி-காஜியாபாத் - மீரட் நமோ பாரத் வழித்தடத்தில் நியூ அசோக் நகா் மற்றும் மீரட் தெற்கு இடையே 55 கி.மீ. தூரம், 11 நிலையங்களை உள்ளடக்கியது. இது தற்போது செயல்பாட்டில் உள்ளது. மீதமுள்ள பகுதி விரைவில் பொதுமக்களுக்கு திறக்கப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது என்று என்சிஆா்டிசி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

