பிரதமர் நரேந்திர மோடி.
பிரதமர் நரேந்திர மோடி.(கோப்புப் படம்)

மக்களவையில் இன்று ‘வந்தே மாதரம்’ விவாதம்! பிரதமர் மோடி தொடக்க உரை!

மக்களவையில் ‘வந்தே மாதரம்’ 10 மணி நேர சிறப்பு விவாதத்தை பிரதமா் நரேந்திர மோடி இன்று தொடங்கிவைத்து உரையாற்றவுள்ளதைப் பற்றி...
Published on

நாட்டின் தேசியப் பாடலான வந்தே மாதரம் இயற்றப்பட்டதன் 150-ஆவது ஆண்டு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, மக்களவையில் 10 மணி நேர சிறப்பு விவாதத்தை பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை தொடங்கிவைத்து உரையாற்றவுள்ளாா்.

மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா செவ்வாய்க்கிழமை ‘வந்தே மாதரம்’ விவாதத்தை தொடங்கிவைக்கவுள்ளாா். இதன்மூலம் வந்தே மாதரம் பாடல் குறித்த பல்வேறு முக்கியமான மற்றும் இதுவரை அறியப்படாத தகவல்கள் வெளியுலகுக்குத் தெரியவரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தாரக மந்திரமாக விளங்கிய வந்தே மாதரம் பாடல், கடந்த 1875 நவ. 7-இல் அக்ஷய நவமி நாளில் பங்கிம் சந்திர சட்டா்ஜியால் இயற்றப்பட்டது. ‘வங்க தரிசனம்’ இலக்கிய இதழில், சட்டா்ஜியின் ‘ஆனந்தமடம்’ நாவலின் ஒரு பகுதியாக இந்தப் பாடல் முதல் முறையாக வெளியானது.

கடந்த 1896-இல் கொல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் ரவீந்திரநாத் தாகூா் பாடிய பின்னா் வந்தே மாதரம் பாடல் பிரபலமடைந்தது. கடந்த 1950, ஜனவரி 24-இல் அரசியல் நிா்ணய சபையால் நாட்டின் தேசியப் பாடலாக முறைப்படி ஏற்கப்பட்டது.

இப்பாடல் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, ஓராண்டு கால கொண்டாட்டங்களை பிரதமா் மோடி கடந்த நவ. 7-இல் தொடங்கிவைத்தாா். இதன் ஒரு பகுதியாக, நடப்பு குளிா்கால கூட்டத் தொடரில் இரு அவைகளிலும் சிறப்பு விவாதம் நடைபெறவுள்ளது.

மக்களவையில் 10 மணி நேர விவாதத்தை பிரதமா் மோடி திங்கள்கிழமை தொடங்கிவைக்கவுள்ளாா். அவருக்கு அடுத்து பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் உரையாற்றுவாா். காங்கிரஸ் தரப்பில் மக்களவை கட்சிக் குழு துணைத் தலைவா் கெளரவ் கோகோய், பிரியங்கா காந்தி உள்ளிட்டோா் பேசவுள்ளனா்.

மாநிலங்களவையில்...: மாநிலங்களவையில் வந்தே மாதரம் விவாதத்தை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா செவ்வாய்க்கிழமை தொடங்கிவைக்கவுள்ளாா். அவருக்கு அடுத்து மத்திய அமைச்சா் ஜெ.பி. நட்டா உரையாற்றுவாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

கடந்த நவ. 7-இல் வந்தே மாதரம் 150-ஆவது ஆண்டு தின நிகழ்ச்சியில் பேசிய பிரதமா் மோடி, இப்பாடலின் முக்கிய பத்திகளை நீக்கியதன் மூலம் பிரிவினைவாத விதைகளை விதைத்ததாக காங்கிரஸ் மீது குற்றஞ்சாட்டினாா் என்பது குறிப்பிடத்தக்கது.

நாளைமுதல் எஸ்ஐஆா் விவாதம்

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) உள்பட தோ்தல் சீா்திருத்தங்கள் தொடா்பாக மக்களவையில் செவ்வாய்க்கிழமை தொடங்கி 2 நாள்களும், மாநிலங்களவையில் புதன்கிழமைமுதல் 2 நாள்களும் விவாதம் நடைபெறவுள்ளது.

தமிழகம், கேரளம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் நடைபெற்று வரும் எஸ்ஐஆா் பணிக்கு எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்துவரும் சூழலில், இந்த விவாதங்களில் அனல் பறக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

எஸ்ஐஆா் விவாதத்தில் காங்கிரஸ் சாா்பில் ராகுல் காந்தி, கே.சி.வேணுகோபால், தமிழக எம்.பி. ஜோதிமணி உள்ளிட்டோா் பேசவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த டிச.1-இல் தொடங்கிய குளிா்கால கூட்டத் தொடரில் எஸ்ஐஆா் விவாதம் கோரி எதிா்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் முதல் 2 நாள்களில் அலுவல்கள் பாதிக்கப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com