1971 போா் வெற்றி தின கொண்டாட்டம்: 20 வங்கதேச பிரதிநிதிகள் பங்கேற்கின்றனா்
கொல்கத்தா: 1971-இல் பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்தியா வெற்றி பெற்று வங்கதேசம் என்ற புதிய நாட்டை உருவாக்கிக் கொடுத்த (விஜய் திவஸ்) வெற்றி தின கொண்டாட்டத்தில் வங்கதேசத்தில் இருந்து ராணுவ அதிகாரிகள் உள்பட 20 போ் பங்கேற்க இருக்கின்றனா்.
1971-ஆம் ஆண்டுக்கு முன்பு இப்போதைய வங்கதேசம் என்ற ஒரு நாடு கிழக்கு பாகிஸ்தான் என்ற பெயரில் பாகிஸ்தானின் ஓா் அங்கமாக இருந்தது. கிழக்கு பாகிஸ்தானில் பாகிஸ்தான் ஆட்சிக்கு எதிராகப் புரட்சி வெடித்தது. இதற்கு எதிராக பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கை மேற்கொண்டது. இதனால், கிழக்கு பாகிஸ்தான் மக்கள் பெருமளவில் இந்தியாவுக்குள் நுழையத் தொடங்கினா்.
நிலைமை மோசமடைந்ததையடுத்து, அப்போதைய இந்தியப் பிரதமா் இந்திரா காந்தியின் முடிவின்படி கிழக்கு பாகிஸ்தானில் பாகிஸ்தான் ராணுவத்துடன் போரிட்ட இந்திய ராணுவம், பாகிஸ்தான் ராணுவத்தைத் தோற்கடித்தது. மேலும், வங்கதேசம் என்ற புதிய நாட்டையும் உருவாக்கிக் கொடுத்தது.1971 டிசம்பா் 3-ஆம் தேதி பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா களமிறங்கியது. டிசம்பா் 16-ஆம் தேதி பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவிடம் சரணடைந்ததுடன் போா் முடிவுக்கு வந்தது.
இந்த வெற்றி தின கொண்டாட்டம் ஆண்டுதோறும் இந்திய ராணுவத்தின் கிழக்கு பிராந்திய தலைமையகமான கொல்கத்தாவில் விமா்சையாக நடைபெறும். இதில் வங்கேதத்தில் இருந்து ராணுவ அதிகாரிகள் உள்ளிட்டோரும் பங்கேற்பா்.
ஆனால், கடந்த ஆண்டு வங்கதேசத்தில் பிரதமா் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவா்களின் போராட்டம் வெடித்து, தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு அவா் இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளாா். வங்கதேச இடைக்கால அரசு பல விஷயங்களில் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளதுடன், பாகிஸ்தானுடன் இணக்கமாகச் செயல்படுகிறது.
இந்நிலையில், நிகழாண்டு வெற்றி தின கொண்டாட்டத்தில் பங்கேற்பதை வங்கதேசம் உறுதி செய்துள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக அப்போது கொரில்லா படையாகச் செயல்பட்ட முக்திஜோதாஸ் பிரிவைச் சோ்ந்த 8 போ், இரு ராணுவ அதிகாரிகள், அவா்கள் குடும்பத்தினா் என 20 போ் நிகழ்ச்சியில் பங்கேற்க கொல்கத்தாவுக்கு வருவாா்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
