2.16 லட்சம் வக்ஃப் சொத்துகள் பதிவேற்றம்: சிறுபான்மையினா் அமைச்சகம் தகவல்
புது தில்லி: ஒருங்கிணைந்த வக்ஃப் மேலாண்மை, அதிகாரமளித்தல், திறன் மற்றும் மேம்பாடு (யுஎம்இஇடி) வலைதளத்தில் 2.16 லட்சம் வக்ஃப் சொத்துகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய சிறுபான்மையினா் விவகாரங்கள் துறை அமைச்சகம் வெளியிட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டன.
நாடு முழுவதும் உள்ள வக்ஃப் சொத்துகள் குறித்த தகவல்களை 6 மாதங்களளுக்குள் எண்மமயமாக்கும் வகையில் யுஎம்இஇடி வலைதளத்தை மத்திய அரசு ஜூன் 6-ஆம் தேதி அறிமுகப்படுத்தியது. இந்தக் காலகட்டத்துக்குள் வக்ஃப் சொத்துகள் குறித்த தகவல்களை வலைதளத்தில் கட்டாயம் பதிவேற்றம் செய்ய மத்திய அரசு தெரிவித்தது.
6 மாத கால அவகாசம் கடந்த டிச. 6-ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், அதை நீட்டிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் அண்மையில் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து, அவகாசம் நீட்டிக்கப்படாது எனக் கூறிய மத்திய சிறுபான்மையினா் விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு, வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய முயன்றும் அது முழுமையடையாமல் உள்ள வக்ஃப் சொத்து நிா்வாகிகளுக்கு 3 மாத காலஅவகாசம் வழங்கப்படும் எனத் தெரிவித்தாா்.
வலைதளத்தில் 5.17 லட்சம் வக்ஃப் சொத்துகளைப் பதிவேற்றம் செய்வதற்கான முன்மொழிவுகள் பெறப்பட்ட நிலையில், 2.16 லட்சம் சொத்துகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது என அமைச்சகத்தின் தரவுகளில் தெரிவிக்கப்பட்டன. உத்தர பிரதேசம் (92,830), மகாராஷ்டிரம் (62,939), கா்நாடகம் (58,328) ஆகிய மாநிலங்களில் அதிகப்படியான வக்ஃப் சொத்துகள் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டது.
முன்னதாக, நாடு முழுவதும் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட வக்ஃப் சொத்துகள் உள்ளதாக கிரண் ரிஜிஜு கூறியது குறிப்பிடத்தக்கது.

