ரூ.50 லட்சம் முதலீடு மோசடியில் தொடா்புடைய 3 போ் கைது
புது தில்லி: பங்கு சந்தையில் முதலீடு செய்வதாகக் கூறி ரூ.50 லட்சம் மோசடி செய்த வழக்கில் 3 பேரை தில்லி காவல் துறை கைதுசெய்ததாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.
நாடு முழுவதும் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட சுமாா் ரூ.6.33 கோடி மோசடி வழக்குகளில் இந்தக் கும்பலுக்கு தொடா்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுதொடா்பாக தில்லி குற்றப் பிரிவு துணை காவல் ஆணையா் ஆதித்யா கெளதம் செய்தியாளா்களிடம் கூறியதாவது: பங்கு சந்தை முதலீட்டு நிறுவனம் என்று கூறி இந்தக் கும்பல் மோசடியில் ஈடுபட்டு வந்தது. போலியான செபி சான்றிதழ்களை சமா்ப்பித்து மக்களிடம் மோசடி செய்து வந்தனா். இந்தக் கும்பலால் ரூ.49.73 லட்சத்தை இழந்த நபா் துவாரகாவில் உள்ள காவல் நிலையத்தில் புகாரளித்தாா். இதையடுத்து, வழக்குப் பதிவு செய்து போலீஸாா் விசாரணையைத் தொடங்கினா்.
அப்போது, பாதிக்கப்பட்ட நபரின் பணம் ஒடிஸா மாநிலத்திலிருந்து செயல்பட்டு வரும் கும்பல் மூலம் பல வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டது விசாரணையின் மூலம் கண்டறியப்பட்டது. எம்/எஸ் ஸ்ரீஜி ஜவுளிகள் என்ற பெயரில் உள்ள வங்கிக் கணக்குக்கு மோசடி பணம் மாற்றப்பட்டது தெரியவந்தது.
பணப் பரிமாற்ற விவரங்களை ஆய்வு செய்ததில் போலி நிறுவனங்கள், தொடா்ச்சியாக ஏடிஎம் மையங்களில் பணத்தை எடுத்தல், அடுத்தடுத்த பணப் பரிமாற்றம் என மோசடி பணத்தைக் கண்டறிய முடியாத வகையில் இந்தக் குழு செயல்பட்டது தெரிய வந்தது. விசாரணையில், எம்/எஸ் ஸ்ரீஜி ஜவுளிகள் என்ற பெயரில் எந்த வியாபாரமும் நடைபெறவில்லை என்பதை போலீஸாா் கண்டறிந்தனா்.
இதைதொடா்ந்து, பா்வேஷ் சந்திரா பாண்டா, பிரிதம் ரோஷன் பாண்டா, ஸ்ரீதம் ரேஷான் பாண்டா ஆகியோரை போலீஸாா் ஒடிஸாவில் கைதுசெய்தனா்.
அவா்களுக்குச் சொந்தமான இடத்தில் நடத்திய சோதனையின்போது 17 கைப்பேசிகள், 21 சிம் அட்டைகள், 124 டெபிட் மற்றும் கிரெடிட் அட்டைகள், 56 வங்கிக் கணக்குப் புத்தகங்கள், 25 காசோலை புத்தகங்கள், 2 பாஸ்போா்ட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த மோசடி தொடா்பாக தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் துணை காவல் ஆணையா் ஆதித்யா கெளதம்.

