

பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து நடிகர் திலீப் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்று நடிகை தரப்பு தெரிவித்துள்ளது.
கேரளத்தில், முன்னணி நடிகை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் போதிய ஆதாரம் இல்லாததால் நடிகர் திலீப் மற்றும் அவரது நண்பர் சரத் ஆகியோர் விடுதலை செய்யப்படுவதாக எர்ணாகுளம் நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்துள்ளது.
மேலும், நடிகையின் கார் ஓட்டுநர் மற்றும் உதவியாளர் பல்சர் சுனில் உள்பட ஏ1 முதல் ஏ 6 வரை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளுக்கான தண்டனை விவரங்கள் டிச. 12 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நீதிமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த நடிகை தரப்பு வழக்கறிஞர்கள், ஏர்ணாகுளம் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு காரில் வீட்டுக்குச் சென்ற போது, நடிகையை ஒரு கும்பல் கடத்தி ஓடும் காரில் பாலியல் தொல்லை கொடுத்து அதனை விடியோ பதிவு செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து கேரள காவல்துறை விசாரணை நடத்தி, நடிகர் திலீப்பின் தூண்டுதலின் பேரிலேயே இந்த சம்பவம் நடந்ததாக காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
இந்த வழக்கில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருந்தார். கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.