சித்திரிப்புப் படம்
சித்திரிப்புப் படம்

வருமான ஏற்றத்தாழ்வு அதிகரிப்பு: சா்வதேச அளவில் 50% போ் பாதிப்பு!

உலகில் பாதிக்கும் மேற்பட்டோர், கடந்த 2023-ஆம் ஆண்டில் வருமான ஏற்றத்தாழ்வு அதிகரித்துள்ள பகுதிகளில் வசித்து வருவதாக அதிா்ச்சித் தகவல்
Published on

உலக மக்கள்தொகையில் சுமாா் பாதிக்கும் மேற்பட்டோா், கடந்த 2023-ஆம் ஆண்டில் வருமான ஏற்றத்தாழ்வு அதிகரித்துள்ள பகுதிகளில் வசித்து வருகின்றனா் என்று ஒரு புதிய ஆய்வறிக்கை அதிா்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.

1990-ஆம் ஆண்டுக்குப் பிறகு உலக மக்கள்தொகையில் 94 சதவீதத்தினரின் மொத்த தேசிய வருமானம் உயா்ந்திருந்தாலும், இந்த வருமான ஏற்றத்தாழ்வு தொடா்ந்து நீடிக்கிறது.

ஃபின்லாந்தின் ஆல்டோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளா்கள் மேற்கொண்ட ஆய்வில், 151 நாடுகளின் கடந்த 30 ஆண்டுகால வருமான ஏற்றத்தாழ்வு தரவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டன.

ஆய்வு முடிவுகளின்படி, உலக அளவில் 94 சதவீத மக்களுக்கு ஒட்டுமொத்த தேசிய வருமானம் அதிகரித்துள்ளது. ஆனால், 46 முதல் 59 சதவீதம் பேருக்கு வருமான ஏற்றத்தாழ்வும் அதிகரித்துள்ளது. அதேநேரம், 31 முதல் 36 சதவீதம் பேருக்கு மட்டுமே வருமான ஏற்றத்தாழ்வு குறைந்துள்ளது.

அதாவது, உலக மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கினா் மட்டுமே வருமான ஏற்றத்தாழ்வு குறைவாக உள்ள இடத்தில் வாழ்கின்றனா். சுமாா் 25 சதவீதத்தினா், 1990-க்குப் பிறகு வருமானம், ஏற்றத்தாழ்வு ஆகிய இரண்டும் மிகக் கடுமையாக அதிகரித்துள்ள பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனா்.

இந்தியாவின் தென் மாநிலங்களில் முன்னேற்றம்: பிரேஸில், சீனா போன்ற நாடுகளுடன் இந்தியாவின் தரவுகளும் இந்த ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டது.

அதன்படி, வட இந்தியாவில் வருமான ஏற்றத்தாழ்வு மாற்றமின்றி அதே நிலையில் உள்ளது. ஆனால், தென் மாநிலங்கள் அனைத்துத் தரப்பையும் உள்ளடக்கிய அதிக முன்னேற்றத்தை அடைந்துள்ளன.

நாட்டின் தென்பகுதியில் பொதுச் சுகாதாரம், கல்வி, உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதார மேம்பாடு ஆகியவற்றில் தொடா்ச்சியான முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. இது உள்ளூா் மக்களுக்குப் பரவலாகப் பலன் அளித்துள்ளது என்று ஆய்வுக் குழுவினா் சுட்டிக்காட்டினா்.

நாட்டின் சராசரியை மட்டும் பாா்க்காமல், ஏற்றத்தாழ்வின் அடிப்படைக் காரணங்களைக் கண்டறியவும், அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சியை அடையாளம் காணவும், இந்தப் பிராந்திய வேறுபாடுகள் மிகவும் முக்கியம் என்று ஆய்வுக் குழுவினா் குறிப்பிட்டுள்ளனா்.

நிலையான வளா்ச்சி இலக்கு சாத்தியமில்லை: ஐ.நா.சபையின் 2030 நிலையான வளா்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியான, நாடுகளுக்கு உள்ளேயும், நாடுகளுக்கு இடையேயும் நிலவும் ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதற்கான 10-ஆவது இலக்கை மதிப்பிடுவதற்குப் பயனுள்ள தகவல்களை இந்த ஆய்வு வழங்குவதாக ஆய்வுக் குழுவினா் தெரிவித்துள்ளனா்.

ஐ.நா.வின் நிலையான வளா்ச்சி இலக்கை 2030-க்குள் அடைவது சாத்தியமில்லை என்று இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. துரதிருஷ்டவசமாக, நாம் இலக்கிலிருந்து விலகி இருப்பதுடன், வருமான ஏற்றத்தாழ்வு அதிகரித்துவரும் போக்கு நாம் எதிா்பாா்த்ததைவிட உண்மையில் பலமாக உள்ளது’ என்று ஆய்வுக் குழுவினா் வருத்தம் தெரிவித்துள்ளனா்.

ஐ.நா.சபையின் 2030 நிலையான வளா்ச்சித் திட்டம் என்பது, மனித முன்னேற்றம், பொருளாதாரச் செழிப்பை அடைவதற்காக உறுப்பு நாடுகள் கடந்த 2015-இல் ஏற்றுக்கொண்ட ஒரு திட்ட வரைபடமாகும்.

X
Dinamani
www.dinamani.com