

இண்டிகோ நிறுவனத்தின் விமானங்கள் தொடர்ந்து ரத்து செய்யப்படுவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் திங்கள்கிழமை முறையிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் இண்டிகோ நிறுவனத்தின் நூற்றுக்கணக்கான விமானங்கள் கடந்த ஒரு வாரமாக ரத்து செய்யப்படுவதாலும், தாமதமாக இயக்கப்படுவதாலும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதி ஜாய்மல்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வில் வழக்கறிஞர் ஒருவர் மனு அளித்துள்ளார்.
அந்த மனுவில், இண்டிகோ நிறுவனத்தில் காலியாக உள்ள பல பணியிடங்களை நிரப்பாததால் மக்கள் சிரமத்துக்கு உள்ளாகி இருப்பதாகவும், விமான ரத்து குறித்து வாடிக்கையாளர்களுக்கு முறையாக தெரிவிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு முறையீட்டின் போது பேசிய தலைமை நீதிபதி, “இது தீவிரமான விஷயம். லட்சக்கணக்கான மக்கள் விமான நிலையங்களில் தவித்து வருகின்றனர். அவர்களில் பலருக்கு உடல்நலப் பிரச்னை இருக்கலாம். இந்த விவகாரத்தில் உரிய நேரத்தில் மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுத்துள்ளது.” எனத் தெரிவித்தார்.
இருப்பினும், இந்த வழக்கை அவசர வழக்காக தலைமை நீதிபதி அமர்வு எடுக்கவில்லை. வழக்கமான வரிசையின் அடிப்படையில் விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோன்று, மற்றொரு வழக்கு தில்லி உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.கே. உபாத்யாயா மற்றும் நீதிபதி துஷார் ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வில் தாக்கல் செய்யப்பட்டது.
இதுதொடர்பான விசாரணையை வருகின்ற புதன்கிழமைக்கு பட்டியலிடுவதாக தில்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்தார்.
விமானிகளுக்கான திருத்தப்பட்ட பணி நேரக் கட்டுப்பாட்டு விதிகளை (எஃப்டிடிஎல்) மத்திய அரசு அமல்படுத்திய நிலையில், இண்டிகோ நிறுவனத்தில் விமானிகள் பற்றாக்குறை ஏற்பட்டு, கடந்த சில நாள்களாக அன்றாட விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதைத் தொடா்ந்து, விமான சேவைகளை சீா்செய்ய அவசர நடவடிக்கையாக விமானிகளின் பணி நேர விதிகளை விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) தளா்த்தியது.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஆயிரக்கணக்கான விமானங்களை இண்டிகோ நிறுவனம் ரத்து செய்த நிலையில், பயணிகளுக்கு ரூ. ரூ. 610 கோடி பயணச்சீட்டு தொகையைத் திருப்பி செலுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.