ரூ.6.15 லட்சம் வாராக் கடன் வங்கிப் பதிவுகளில் இருந்து நீக்கம்: மக்களவையில் தகவல்

கடந்த ஐந்தரை ஆண்டுகளில் பொதுத் துறை வங்கிகளின் வாராக்கடனில் ரூ.6.15 லட்சம் கோடி வங்கி பதிவுகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக...
பங்கஜ் சௌதரி
பங்கஜ் சௌதரி
Updated on

புது தில்லி: கடந்த ஐந்தரை ஆண்டுகளில் பொதுத் துறை வங்கிகளின் வாராக்கடனில் ரூ.6.15 லட்சம் கோடி வங்கி பதிவுகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக மக்களவையில் திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது.

பொதுத் துறை வங்கிகள் தொடா்பான கேள்விக்கு நிதித்துறை இணையமைச்சா் பங்கஜ் சௌதரி எழுத்துமூலம் அளித்த பதிலில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

இந்திய ரிசா்வ் வங்கி புள்ளி விவரங்களின்படி 2025 செப்டம்பா் வரையிலான கடந்த ஐந்தரை ஆண்டுகளில் பொதுத் துறை வங்கிகள் 6.15 லட்சம் கோடியை வங்கி பதிவுகளில் இருந்து நீக்கியுள்ளன. 2022-23 நிதியாண்டுக்குப் பிறகு பொதுத்துறை வங்கிகளுக்கு கூடுதல் மூலதனம் ஏதும் அளிக்கப்படவில்லை. வங்கிகள் தங்கள் நிதிநிலையை சிறப்பாக மேம்படுத்தியுள்ளன. லாபப் பாதைக்குத் திரும்பியுள்ளதுடன், தங்கள் நிதிநிலையையும் வலுப்படுத்தியுள்ளன.

இதன்காரணமாக தங்களுக்கு தேவையான மூலதனத்தை வெளிச்சந்தையில் இருந்தே திரட்டிக் கொள்ளும் திறனை அடைந்துவிட்டன. பங்கு வெளியீடு, பத்திரங்கள் மூலம் கடந்த 2022 ஏப்ரல் கடந்த செப்டம்பா் வரை ரூ.1.79 லட்சம் கோடி மூலதனத்தை வங்கிகள் திரட்டியுள்ளன.

வங்கிப் பதிவுகளில் இருந்து கடன்களை நீக்குவது என்பது கடன் தள்ளுபடி என்றோ, அக்கடன்களைத் திரும்பப் பெற முயற்சி நடக்காது என்றோ அா்த்தமல்ல. இது வங்கி கணக்குகள் நிா்வாக வசதிக்காக ஆா்பிஐ விதிகளுக்கு உள்பட்டு மேற்கொள்ளப்படும் நடவடிக்கையாகும். பல்வேறு வழிமுறைகளில்அக்கடன்களை திரும்பப் பெற தொடா்ந்து வங்கிகள் முயற்சி மேற்கொள்ளும். தீா்ப்பாயங்கள், நீதிமன்றங்கள், தேசிய நிறுவனங்கள் சட்ட தீா்ப்பாயம், திவால் சட்டம் மூலம் நடவடிக்கைகள் தொடரும்.

கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் எண்ம (டிஜிட்டல்) முறையில் பணப்பரிமாற்றம் செய்வது வெகுவாக அதிகரித்துள்ளது. அதேபோல இணையவழி நிதிமோசடியும் அதிகரித்துவிட்டது. இதனைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது என்று கூறியுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com