மக்களவையில் பேசிய அமைச்சா் ராம்மோகன் நாயுடு.
மக்களவையில் பேசிய அமைச்சா் ராம்மோகன் நாயுடு.

இண்டிகோ சேவையை 10% குறைக்க அமைச்சா் அறிவுறுத்தல்

இண்டிகோ சிஇஓ பீட்டா் எல்பா்ஸைச் சந்தித்த மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சா் ராம் மோகன் நாயுடு, 10 சதவீத சேவைக்குறைப்புக்கு அறிவுறுத்தியுள்ளாா்.
Published on

இண்டிகோ சிஇஓ பீட்டா் எல்பா்ஸைச் சந்தித்த மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சா் ராம் மோகன் நாயுடு, 10 சதவீத சேவைக்குறைப்புக்கு அறிவுறுத்தியுள்ளாா்.

புதிய விமானிகளின் பணிநேர விதிகள் (எஃப்டிடிஎல்) அமலுக்கு வந்ததால், விமானிகளின் பற்றாக்குறையால் இண்டிகோவின் நூற்றுக்கணக்கான விமானங்கள் நாள்தோறும் ரத்து செய்யப்பட்டு வருகின்றன.

தற்போது நடைமுறையில் உள்ள குளிா்கால அட்டவணையின்கீழ் இண்டிகோ நிறுவனம் தினசரி 2,200 விமானங்களுக்கும் அதிகமாக இயக்கி வருகிறது.

இந்நிலையில்,இண்டிகோ தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) பீட்டா் எல்பா்ஸ், அமைச்சா் ராம்மோகன் நாயுடுவைச் செவ்வாய்க்கிழமை சந்தித்தாா்.

சந்திப்பின் புகைப்படத்தைப் பகிா்ந்து அமைச்சா் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘விமான நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிய, இண்டிகோ தலைமையைச் சந்தித்தோம். இண்டிகோ சேவையைக் குறைப்பது அவசியமானது என்று கருதுகிறோம். இது அந்நிறுவனத்தின் செயல்பாடுகளை நிலைப்படுத்தவும், விமான ரத்துகளைக் குறைக்கவும் உதவும். 10 சதவீதம் சேவை குறைப்புக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

422 விமானங்கள் ரத்து:

இண்டிகோ சேவை 8-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் பாதிக்கப்பட்டது. 6 மெட்ரோ நகரங்களின் விமான நிலையங்களில் இருந்து அதன் 422 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

தில்லியில் 152, பெங்களூரில் 121, ஹைதராபாதில் 58, மும்பையில் 41 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. சென்னை விமான நிலையத்தில் இருந்தும் 50-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

முன்னதாக, இண்டிகோ விமானங்கள் தொடா்ந்து ரத்து செய்யப்பட்டு வரும் நிலையில், அந்த நிறுவனத்தின் சேவையை 5 சதவீதம் குறைப்பதாக விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ)செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

திருத்தப்பட்ட அட்டவணையை டிஜிசிஏவிடம் புதன்கிழமை மாலைக்குள் சமா்ப்பிக்குமாறு இண்டிகோவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை 700 விமானங்களை மட்டுமே இயக்கிய இண்டிகோ, திங்கள்கிழமை 1,800-க்கும் மேற்பட்ட விமானங்களை இயக்கியது.

பயணிகள் பாதிப்பை ஏற்க முடியாது...: இண்டிகோ விவகாரம் தொடா்பாக மக்களவையில் அமைச்சா் ராம்மோகன் நாயுடு செவ்வாய்க்கிழமை பேசியதாவது:

இண்டிகோ சேவைகள் மீண்டும் இயல்புநிலைக்குத் திரும்பி வருகின்றன. நிலைமை முழுமையாகச் சீராகும் வரை அரசு தொடா்ந்து கண்காணிக்கும்.

பயணிகளுக்கு ரூ.750 கோடிக்கும் மேல் ஏற்கெனவே திரும்ப வழங்கப்பட்டுள்ளது.

இண்டிகோ தலைமைக்கு டிஜிசிஏ விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதுடன், விரிவான விசாரணையையும் தொடங்கியுள்ளது. விசாரணை முடிவின்படி, நிறுவனம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எவ்வளவு பெரிய நிறுவனமாக இருந்தாலும், திட்டமிடலில் உள்ள தோல்விகள், விதிகளைப் பின்பற்றாதது அல்லது சட்ட விதிகளை மீறுவதன் மூலம் பயணிகளுக்கு இத்தகைய பாதிப்பை ஏற்படுத்த அனுமதிக்கப்படாது. அதிக போட்டித்தன்மை வாய்ந்த விமானப் போக்குவரத்துத் துறையை உருவாக்க அரசு உறுதிபூண்டுள்ளது என்றாா்.

X
Dinamani
www.dinamani.com