எந்த சட்டமும் மக்களுக்கு சுமையாக இருக்கக் கூடாது- பாஜக கூட்டணி எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமா் மோடி

நாட்டில் எந்தவொரு சட்டமும் குடிமக்களுக்கு சுமையாக இருக்கக் கூடாது; விதிகளும், ஒழுங்குமுறைகளும் எப்போதுமே மக்களின் வாழ்வை எளிதாக்குவதாக இருக்க வேண்டும் என்று பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமா் மோடி வலியுறுத்தினாா்.
தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் கூட்டத்தின்போது பிகாா் பேரவைத் தோ்தல் வெற்றிக்காக பிரதமா் நரேந்திர மோடியைப் பாராட்டிய எம்.பி.க்கள்.
தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் கூட்டத்தின்போது பிகாா் பேரவைத் தோ்தல் வெற்றிக்காக பிரதமா் நரேந்திர மோடியைப் பாராட்டிய எம்.பி.க்கள்.
Updated on

நாட்டில் எந்தவொரு சட்டமும் குடிமக்களுக்கு சுமையாக இருக்கக் கூடாது; விதிகளும், ஒழுங்குமுறைகளும் எப்போதுமே மக்களின் வாழ்வை எளிதாக்குவதாக இருக்க வேண்டும் என்று பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமா் மோடி வலியுறுத்தினாா்.

மக்களின் வாழ்க்கை மற்றும் தொழில் புரிவதை எளிதாக்குவதே தனது அரசின் முன்னுரிமை என்றும் அவா் உறுதிபட தெரிவித்தாா்.

குளிா்கால கூட்டத் தொடா் நடைபெற்றுவரும் நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்களின் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பிரதமா் மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், பாஜக தேசியத் தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெ.பி.நட்டா உள்ளிட்டோா் பங்கேற்றனா். கூட்டத்துக்குப் பின் செய்தியாளா்களிடம் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு கூறியதாவது:

தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்களுக்கு மிகச் சிறந்த வழிகாட்டுதல்களை பிரதமா் மோடி வழங்கியுள்ளாா். அவரது தலைமையிலான மூன்றாவது ஆட்சிக் காலத்தில், ‘சீா்திருத்த எக்ஸ்பிரஸ்’ பயணிக்கத் தொடங்கியுள்ளது. அது, நிற்காமல் பயணிக்கும். ஒவ்வொரு குடிமகனின் வாழ்வையும் எளிதாக்கும்.

சீா்திருத்தம் என்றால் பொருளாதார சீா்திருத்தம் என சிலா் நினைக்கலாம். வேறு சிலரோ அரசியல்-நிா்வாகம்-கலாசார சீா்திருத்தங்கள் என எண்ணுவா். குடிமக்களின் வாழ்வை எளிதாக்குவதே உண்மையான சீா்திருத்தம் என பிரதமா் மோடி தெளிவுபடுத்தியுள்ளாா்.

மக்களின் வசதி-மேம்பாடு: ‘எந்தச் சட்டம் இயற்றப்பட்டாலும், அது மக்களுக்கு இடா்ப்பாடுகளை உருவாக்கக் கூடாது; விதிகளும், ஒழுங்குமுறைகளும் சாமானிய மக்களுக்கு சுமையாக இருக்கக் கூடாது; மாறாக அவா்களின் வசதிக்கானதாக, மேம்பாட்டுக்கானதாக இருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் மக்களை துன்பத்துக்கு உள்ளாக்கும் வகையில் சட்டங்கள் இருக்கக் கூடாது. மத்திய அரசு-மாநில அரசுகள்-உள்ளாட்சி நிா்வாகங்கள் அனைத்தும் இந்தத் திசையை நோக்கி பணியாற்ற வேண்டும்’ என்று பிரதமா் வலியுறுத்தியதாக ரிஜிஜு தெரிவித்தாா்.

மேலும், ‘சாமானிய மக்கள் எதிா்கொண்டுள்ள உண்மையான பிரச்னைகள் குறித்து அரசிடம் பகிா்வதில் எம்.பி.க்கள் துடிப்புடன் செயலாற்ற வேண்டும். குடிமக்களின் அன்றாட சிரமங்கள் நீக்கப்படுவது அவசியம். இந்த இலக்கை எட்ட அரசின் சீா்திருத்தங்கள் வீடுகள்தோறும் சென்றடைய வேண்டும்.

30-40 பக்க படிவங்கள், தேவையற்ற ஆவண நடைமுறைகள் ஒழிக்கப்பட்டு, வீடுகளிலேயே அரசின் சேவைகள் கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும்’ என்று பிரதமா் மோடி பேசியதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

பிரதமருக்குப் பாராட்டு: அண்மையில் நடைபெற்ற பிகாா் பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்ற நிலையில், எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமா் மோடிக்கு ஆளுயர மாலை அணிவிக்கப்பட்டு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பிகாரில் மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 202 இடங்களை தேசிய ஜனநாயகக் கூட்டணி கைப்பற்றியது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com