உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்கோப்புப் படம்

சந்தேக வாக்காளரின் குடியுரிமையை தேர்தல் ஆணையம் விசாரிக்க முடியாதா? உச்சநீதிமன்றம் கேள்வி

"சந்தேகத்துக்குரிய வாக்காளரின் குடியுரிமை குறித்து தேர்தல் ஆணையம் விசாரணைகூட நடத்த முடியாதா' என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கேள்வி எழுப்பியது.
Published on

வாக்காளரின் குடியுரிமையைத் தீர்மானிப்பது தேர்தல் ஆணையத்தின் அரசமைப்புச் சட்ட அதிகாரத்துக்கு அப்பாற்பட்டது என்றபோதும், "சந்தேகத்துக்குரிய வாக்காளரின் குடியுரிமை குறித்து தேர்தல் ஆணையம் விசாரணைகூட நடத்த முடியாதா' என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கேள்வி எழுப்பியது.

பிகார் மாநிலத்தைத் தொடர்ந்து தமிழகம், மேற்கு வங்கம் உள்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இரண்டாம் கட்டமாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை (எஸ்ஐஆர்) தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இதில், அந்தந்த மாநிலங்களில் முந்தைய எஸ்ஐஆர் அடிப்படையிலான வாக்காளர் பட்டியலில் இடம்பெறாத வாக்காளர்கள், தங்களின் குடியுரிமையை நிரூபிப்பதற்கான தேர்தல் ஆணையம் பட்டியலிட்ட 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றின் நகலுடன் எஸ்ஐஆர் படிவத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். இதன் காரணமாக பல லட்சம் வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளதாக அச்சம் எழுந்துள்ளது.

இந்த நிலையில், தேர்தல் ஆணையத்தின் எஸ்ஐஆர் பணிக்கு எதிராக ஏராளமான மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான இறுதி விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதி ஜய்மால்ய பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வில் செவ்வாய்க்கிழமை வந்தது.

அப்போது, மூத்த வழக்குரைஞர் சதன் ஃபராசத், பி.சி.சென்உள்ளிட்டோர் ஆஜராகி வாதிட்டனர். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப் பிரிவு 326-இன் கீழ், வாக்காளர் பட்டியலில் பெயர் பதிவு செய்யும் நபர் இந்திய குடிமகனாக இருப்பதோடு, 18 வயதை பூர்த்தி செய்தவராக இருக்க வேண்டும். மேலும், குறிப்பிட்ட தொகுதியில் குடியிருப்பவராக இருக்க வேண்டும். இந்த மூன்று நிபந்தனைகளை ஆய்வு செய்யும் அதிகாரம் மட்டுமே தேர்தல் ஆணையத்துக்கு உள்ளது.

மாறாக, வாக்காளர் இந்திய குடிமகனா அல்லது இல்லையா என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்குக் கிடையாது. அவ்வாறு, வாக்காளரின் குடியுரிமை குறித்து சந்தேகம் எழுந்தால், அதுகுறித்து சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம் தகவல் தெரிவித்து விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும், ஒருவரின் குடியுரிமையை மத்திய அரசு அல்லது மத்திய அரசால் நியமிக்கப்படும் வெளிநாட்டினர் தீர்ப்பாயங்களால் மட்டுமே தீர்மானிக்க முடியும். அந்த வகையில், வாக்காளர் பட்டியில் ஏற்கெனவே வாக்காளராக இடம்பெற்ற நபரை, குடியுரிமை இல்லை என்ற அடிப்படையில் தேர்தல் அதிகாரிகளே நேரடியாக வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கிவிட முடியாது' என்று வாதிட்டனர்.

இதைக் கேட்ட நீதிபதிகள், "ஒருவரின் குடியுரிமையை தீர்மானிப்பதற்கும், குடியுரிமை குறித்து விசாரிப்பதற்கும் வித்தியாசம் உள்ளது.

சந்தேகத்துக்குரிய வாக்காளரின் குடியுரிமை குறித்து தேர்தல் ஆணையம் விசாரணைகூட நடத்த முடியாதா? வாக்காளர் சேர்க்கை மிகப்பெரிய அளவில் சந்தேகத்தை ஏற்படுத்துகிறபோது, அதுகுறித்து ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அந்த விவாகரத்தை பரிந்துரை செய்ய தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது' என்று குறிப்பிட்டனர். இந்த வழக்கு விசாரணை மீண்டும் டிசம்பர் 11-ஆம் தேதி தொடர உள்ளது.

X
Dinamani
www.dinamani.com