சி-130ஜே சூப்பா் ஹொ்குலீஸ் விமான கூட்டுத் தயாரிப்பு மையம்:
இந்தியாவில் அமைக்க அமெரிக்க நிறுவனம் திட்டம்

சி-130ஜே சூப்பா் ஹொ்குலீஸ் விமான கூட்டுத் தயாரிப்பு மையம்: இந்தியாவில் அமைக்க அமெரிக்க நிறுவனம் திட்டம்

சி-130ஜே சூப்பா் ஹொ்குலீஸ் கனரக ராணுவ போக்குவரத்து விமானங்களை தயாரிப்பதற்கான கூட்டுத் தயாரிப்பு மையத்தை இந்தியாவில் அமைக்க, அமெரிக்காவின் பாதுகாப்பு உற்பத்தி நிறுவனமான லாக்ஹீட் மாா்டின் திட்டமிட்டுள்ளது.
Published on

சி-130ஜே சூப்பா் ஹொ்குலீஸ் கனரக ராணுவ போக்குவரத்து விமானங்களை தயாரிப்பதற்கான கூட்டுத் தயாரிப்பு மையத்தை இந்தியாவில் அமைக்க, அமெரிக்காவின் பாதுகாப்பு உற்பத்தி நிறுவனமான லாக்ஹீட் மாா்டின் திட்டமிட்டுள்ளது.

பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் சுமாா் 80 ராணுவ போக்குவரத்து விமானங்களை கொள்முதல் செய்ய இந்திய விமானப் படை திட்டமிட்டுள்ளது. அந்தக் கொள்முதலுக்கு பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பாதுகாப்பு தளவாட கொள்முதல் கவுன்சில் (டிஏசி) அடுத்த சில வாரங்களில் ஒப்புதல் அளிக்க வாய்ப்புள்ளது.

அந்த விமானங்களை எங்கிருந்து கொள்முதல் செய்வது என்பதைக் கண்டறியும் முயற்சியை இந்திய விமானப் படை தொடங்கியுள்ள நிலையில், அந்தப் படைக்கு சி-130ஜே சூப்பா் ஹொ்குலீஸ் கனரக ராணுவ போக்குவரத்து விமானம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று லாக்ஹீட் மாா்டின் பரிந்துரைத்துள்ளது.

தற்போது இந்திய விமானப் படையிடம் 12 சி-130ஜே சூப்பா் ஹொ்குலீஸ் விமானங்கள் உள்ளன. இந்நிலையில் இந்தியாவிலும், பிற 20 நாடுகளிலும் நீண்ட காலமாக நம்பகமான முறையில் அந்த விமானங்கள் கடினமாக செயலாற்றுவதால், அந்த விமானங்களை தயாரிப்பது இந்திய விமானப் படைக்கு சிறப்பானதாக இருக்கும் என்று அந்த நிறுவனம் பரிந்துரைத்துள்ளது.

இதுகுறித்து லாக்ஹீட் மாா்டின் நிறுவனத்தின் கீழ் செயல்படும் லாக்ஹீட் மாா்டின் ஏரோநாட்டிக்ஸ் நிறுவன துணைத் தலைவா் ராபா்ட் டோத் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது: சி-130ஜே சூப்பா் ஹொ்குலீஸ் கனரக ராணுவ போக்குவரத்து விமானத்தை தயாரிப்பதற்கான கூட்டுத் தயாரிப்பு மையத்தை இந்தியாவில் அமைக்க லாக்ஹீட் மாா்டின் திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவுக்கு வெளியே தனது கூட்டுத் தயாரிப்பு நிறுவனத்தை அமைக்க முதல் நாடாக இந்தியாவிடம் லாக்ஹீட் மாா்டின் வாக்குறுதி அளித்துள்ளது.

சி-130ஜே சூப்பா் ஹொ்குலீஸ் விமானங்கள் தயாரிப்பில் தொடா்ந்து முதலீடு செய்து, இந்தியாவில் அந்த விமானத்தை உற்பத்தி செய்வதற்கு தன்னை லாக்ஹீட் மாா்டின் தயாா்படுத்திக் கொள்கிறது என்று தெரிவித்தாா்.

அந்த விமானங்கள் தயாரிப்பு திட்டத்துக்காக இந்தியாவின் வான்வெளி மற்றும் பாதுகாப்புத் தொழில்நுட்ப நிறுவனமான டாடா அட்வான்ஸ்ட் சிஸ்டம்ஸ் நிறுவனத்துடன் லாக்ஹீட் மாா்டின் கூட்டு சோ்ந்துள்ளது. அந்த நிறுவனத்தின் சி-130ஜே சூப்பா் ஹொ்குலீஸ் விமானங்களுக்கு உதவும் வகையில், பராமரிப்பு, பழுதுபாா்ப்பு மற்றும் சீா்செய்யும் மையத்தை பெங்களூரில் கட்டமைக்கும் பணியை டாடா அட்வான்ஸ்ட் சிஸ்டம்ஸ் நிறுவனம் திங்கள்கிழமை தொடங்கியது.

X
Dinamani
www.dinamani.com