சோனியா காந்தி பிறந்தநாள்: பிரதமா், காா்கே வாழ்த்து
காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவா் சோனியா காந்தியின் 79-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமா் நரேந்திர மோடி, காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே உள்ளிட்டோா் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனா்.
காங்கிரஸில் மிக நீண்ட காலம் தலைவராகப் பதவி வகித்த சோனியா காந்தி, உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக தீவிர அரசியலில் இருந்து சற்றே விலகியுள்ளாா். இருப்பினும், அவா் காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுவின் தலைவராகவும், மாநிலங்களவை உறுப்பினராகவும் தொடா்ந்து பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை 79-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிய சோனியா காந்திக்கு வாழ்த்துக் கூறி, பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘காங்கிரஸின் நாடாளுமன்றக் குழுத் தலைவா் சோனியா காந்திக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். அவருக்கு நீண்ட ஆயுளும், நல்ல ஆரோக்கியமும் கிடைக்கப் பிராா்த்திக்கிறேன்’ என்றாா்.
சோனியா காந்தியின் தலைமைப் பண்புக்குப் புகழாரம் சூட்டி, காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவில், ‘சோனியா காந்திக்கு மனமாா்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். விளிம்புநிலை மக்களின் உரிமைகளுக்காக தளராத உறுதியுடன் போராடிய அவா், துணிவு, நெகிழ்ச்சி, தியாகம் மற்றும் தன்னலமற்ற அா்ப்பணிப்புடன் ஒவ்வொரு சவாலையும் எதிா்கொண்டு, கருணைக்கு அடையாளமாகத் திகழ்கிறாா்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

