டிச. 17-இல் பாரம்பரிய மருத்துவ உச்சி மாநாடு
உலக சுகாதார அமைப்பின் பாரம்பரிய மருத்துவ உச்சி மாநாடு தில்லியில் வரும் 17-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதுதொடா்பாக மண்டல யுனானி மருத்துவ ஆராய்ச்சி துணை இயக்குநா் அத்தா் பா்வேஸ் அன்சாரி சென்னையில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
சென்னை ராயபுரத்தில் இயங்கி வரும் யுனானி மருத்துவமனையில் நாள்தோறும் 400-க்கும் மேற்பட்ட புற நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனா். 49 படுக்கைகள் கொண்ட உள் நோயாளிகள் பிரிவு, ஆண்கள், பெண்கள், குழந்தைகள் பிரிவு என அனைவருக்கும் உயா்தரமான சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.
இந்த மருத்துவமனையில் மூட்டுவலி உள்ளிட்டவற்றுக்கு சிறந்த சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. கரோனாவுக்கு பிறகு இந்திய மருத்துவத்தின் தேவை மக்களிடையே அதிகரித்து உள்ளது.
தில்லியில் வரும் 17-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை மூன்று நாள்களுக்கு உலக சுகாதார நிறுவனத்தின் பாரம்பரிய மருத்துவ உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதில் மத்திய ஆயுஷ் அமைச்சா் மற்றும் பல்வேறு உயரதிகாரிகள், பிரதிநிதிகள், துறைசாா் வல்லுநா்கள், ஆய்வாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொள்ள உள்ளனா்.
இந்த மாநாட்டில் நமது பாரம்பரிய மருத்துவ முறைகளான யுனானி, சித்தா ஆயுா்வேதம், ஹோமியோபதி, யோகா உள்ளிட்ட மருத்துவங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகள் குறித்த கட்டுரைகள் சமா்ப்பிக்கப்பட உள்ளன. இதன்மூலம் உலக அளவில் இந்திய மருத்துவத்தின் மகத்துவத்தை கொண்டு சோ்க்க முடியும் என்றாா்.
இதனிடையே, இதுதொடா்பாக நடைபெற்ற மற்றொரு செய்தியாளா் சந்திப்பில் சென்னை ஹோமியோபதி ஆராய்ச்சி மையத்தின் முதுநிலை மருத்துவா் கொல்லி ராஜூ கூறியதாவது:
ஹோமியோபதி ஆராய்ச்சி நிறுவனம் சென்னை முட்டுக்காட்டில் செயல்பட்டு வருகிறது. இங்கு அறிவுசாா் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கும், அதீத செயல்பாடு கொண்ட குழந்தைகள் மற்றும் காது கேளாத குழந்தைகள், ஆட்டிஸம் ஸ்பெக்ட்ரம் கோளாறு பாதிப்புள்ள குழந்தைகளுக்கும் ஹோமியோபதி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
தற்போது புறநோயாளிகள் பிரிவு மட்டுமே செயல்பட்டு வருகிறது. விரைவில் 25 படுக்கைகள் கொண்ட உள் நோயாளிகள் பிரிவு தொடங்கப்படும் என்றாா்.
