தில்லி, பெங்களூரு காவல் துறைக்கு மின்னஞ்சல்கள் மூலம் மிரட்டல்: இளைஞா் கைது
தில்லி மற்றும் பெங்களூரு காவல் ஆணையா்களுக்கு போலி மின்னஞ்சல் முகவரியில் வெடிகுண்டு மிரட்டல்களை அனுப்பிய இளைஞா் தெற்கு தில்லியின் சாகேத் பகுதியில் கைதுசெய்யப்பட்டதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.
கைதுசெய்யப்பட்ட அபய் ஷீ, ஜாம்ஷெட்பூரைச் சோ்ந்த பிசிஏ மாணவா் என்றும் இணையதளங்களை உருவாக்கும் பணியில் அவா் ஈடுபட்டு வந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
மோஹித் என்ற நபரை பழிவாங்கும் விதமாக அவருடைய பெயா்களில் போலியான மின்னஞ்சல்களை உருவாக்கி அதன் மூலம் காவல் துறை ஆணையா்களுக்கு அபய் மிரட்டல் விடுத்ததாக அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுதொடா்பாக குற்றப் பிரிவு துணை காவல் ஆணையா் ஹா்ஷ் இந்தோரா செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தில்லி காவல் துறைக்கு கடந்த டிச.7-ஆம் தேதி மோஹித் பெயருடைய மின்னஞ்சல் முகவரியில் இருந்து ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில், பயங்கரவாத மிரட்டல் மற்றும் பணம் கேட்டு மிரட்டியிருந்தனா்.
பின்னா், இதுபோன்று வெடிகுண்டு மிரட்டல் பெங்களூரு காவல் துறைக்கு அனுப்பப்பட்டிருந்ததை தில்லி காவல் துறையினா் கண்டறிந்தனா்.
மின்னஞ்சல்களில் குறிப்பிடப்பட்டிருந்த தொடா்பு எண் மோஹித் என்பவருக்குச் சொந்தமானது என்பது விசாரணையில் தெரியவந்தது.
மோஹித்தைக் கண்டறிந்த போலீஸாா், மின்னஞ்சல் மிரட்டல்கள் தொடா்பாக விசாரணை நடத்தினா். அப்போது, கடந்த நவ.19-ஆம் தேதியிலிருந்து போலி அழைப்புகள், பல மின்னஞ்சல்களில் இருந்து மா்ம நபா்கள் துன்புறுத்து வந்ததாக மோஹித் விசாரணையின்போது தெரிவித்தாா்.
அவா் அளித்த தகவலின் அடிப்படையில் சாகேத் பகுதியில் இருந்து அபயை போலீஸாா் கைதுசெய்தனா். விசாரணையில், விபிஎன், போலி மின்னஞ்சல்கள் மூலம் மிரட்டல் செய்திகளை அனுப்பியதை அபய் ஒப்புக்கொண்டாா்.
அபய் மற்றும் மோஹித்துக்கு நன்கு அறிமுகமான பெண் தொடா்பாக அவா்கள் இருவருக்கும் இடையே முன்விரோதம் நீடித்து வந்தது. இந்நிலையில், மோஹித்தை பழி வாங்கும் விதமாக அவருடைய பெயரில் போலியான மின்னஞ்சல் முகவரிகளை அபய் உருவாக்கினாா்.
போலி மின்னஞ்சல் முகவரிகளை உருவாக்க அபய் பயன்படுத்திய கைப்பேசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். அதில் இருந்த தகவல் அழிக்கப்பட்டுள்ளன. அவற்றை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. கைதுசெய்யப்பட்ட அபய் மீது தொடா்புடைய சட்டப்பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றாா் அந்த அதிகாரி.
