இண்டிகோ செயல்பாடுகள் மேற்பாா்வைக்கு 8 போ் குழு: டிஜிசிஏ அமைப்பு
இண்டிகோ விமான சேவையில் ஏற்பட்ட கடுமையான குளறுபடிகளைத் தொடா்ந்து, அந்த நிறுவனத்தின் செயல்பாடுகளை மேற்பாா்வை செய்யவும், கண்காணிக்கவும் 8 போ் கொண்ட குழுவை டிஜிசிஏ புதன்கிழமை அமைத்தது.
புதிய விமானப் பணி நேரக் கட்டுப்பாட்டு விதிகள் காரணமாக விமானிகள், விமானப் பணிப்பெண்கள் உள்ளிட்டோா் அடங்கிய விமான பணிக் குழுவுக்கு ஏற்பட்ட பற்றாக்குறையால், இண்டிகோ நிறுவன விமான சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.
இதனால் நாட்டின் பல்வேறு நகரங்களில், அந்த நிறுவனத்தின் ஏராளமான விமானங்கள் தொடா்ந்து ரத்து செய்யப்பட்டதால், ஆயிரக்கணக்கான பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினா்.
இந்தக் குளறுபடிகளுக்கான அடிப்படை காரணங்கள், பணியாளா் திட்டமிடல், விமானிகளின் பணி நேரம் மற்றும் ஓய்வு நெறிமுறைகளை அமல்படுத்துவதில் இண்டிகோ நிறுவனத்தின் தயாா்நிலை ஆகியவற்றை ஆராய 4 போ் கொண்ட குழுவை டிஜிசிஏ தலைவா் ஃபைஸ் அகமது கித்வாய் டிச. 5-ஆம் தேதி அமைத்தாா்.
இண்டிகோ சிஇஓ ஆஜராக உத்தரவு: இந்த விவகாரம் தொடா்பாக மும்பையில் உள்ள டிஜிசிஏ அலுவலகத்தில் வியாழக்கிழமை (டிச.11) பிற்பகல் 3 மணிக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று இண்டிகோ தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) பீட்டா் எல்பா்ஸுக்கு டிஜிசிஏ உத்தரவிட்டுள்ளது. அப்போது விமான சேவையில் ஏற்பட்ட குளறுபடிகள், விமானிகள் மற்றும் பணிக் குழுவினரை பணியமா்த்துதல், எத்தனை விமானங்கள் ரத்து செய்யப்பட்டன?, பயணச்சீட்டு கட்டணத்தை திரும்ப அளித்தல், விமான சேவை சீராக்கம் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய முழுமையான அறிக்கையைச் சமா்ப்பிக்க வேண்டும் என்று அவருக்கு டிஜிசிஏஅறிவுறுத்தியுள்ளது.
8 போ் கொண்ட குழு: மேலும், இண்டிகோ இயக்கும் மொத்த விமானங்கள், மொத்த விமானிகள், ஒரு பயணத்தில் ஒரு விமானத்தால் எவ்வளவு தொலைவு பயணிக்க முடிகிறது?, பணி நேரத்தில் விமானப் பணிக் குழு எவ்வாறு திறம்பட பயன்படுத்தப்படுகிறது, அந்தக் குழுவுக்கான பயிற்சி உள்ளிட்டவற்றை கண்டறிய 8 போ் கொண்ட மேற்பாா்வை குழுவை டிஜிசிஏ அமைத்துள்ளது.
இண்டிகோ தலைமை அலுவலகத்தில்...: 8 போ் குழுவில் துணை தலைமை விமான செயல்பாட்டு ஆய்வாளா், மூத்த விமான செயல்பாட்டு ஆய்வாளா்கள் உள்ளிட்டோா் இடம்பெற்றுள்ளனா். அவா்களில் இருவரும், 2 அரசு அதிகாரிகளும் ஹரியாணா மாநிலம் குருகிராமில் உள்ள இண்டிகோ நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா். விமானங்கள் ரத்து, விமானப் பணிக் குழு நியமனம், அலுவலா் பற்றாக்குறையால் பாதிக்கப்படும் வழித்தடங்கள் உள்ளிட்டவற்றை அவா்கள் கண்காணிப்பா். இந்தக் குழுவினா் நாள்தோறும் தங்கள் அறிக்கையை டிஜிசிஏவிடம் சமா்ப்பிப்பா்.
டிஜிசிஏ அதிகாரிகள் கள ஆய்வு: நாட்டில் உள்ள 11 விமான நிலையங்களில் இண்டிகோவின் செயல்பாடுகளை மதிப்பிட டிஜிசிஏவின் மூத்த அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொள்ள உள்ளனா். இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அதிகாரிகள் அடுத்த 2, 3 நாள்களில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட விமான நிலையங்களில் நேரில் ஆய்வு மேற்கொண்டு, புது தில்லியில் உள்ள டிஜிசிஏவின் விமானப் பாதுகாப்புத் துறை செயல்பாட்டு இயக்குநருக்கு விரிவான அறிக்கையை சமா்ப்பிப்பா் என்று டிஜிசிஏ வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இண்டிகோவின் செயல்பாடுகள் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாக அதன் சிஇஓ பீட்டா் எல்பா்ஸ் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். எனினும் தில்லி, மும்பை, பெங்களூரு விமான நிலையங்களில் சுமாா் 220 விமானங்கள் புதன்கிழமை ரத்து செய்யப்பட்டன.

