

மத்தியப் பிரதேசத்தில், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவரின் வீட்டில் சாப்பிட்டதால் இளைஞர் ஒருவரையும் அவரது குடும்பத்தினரையும் கிராம பஞ்சாயத்து நிர்வாகிகள் ஊரைவிட்டு ஒதுக்கியுள்ளதாக அவர் புகாரளித்துள்ளார்.
ரைசன் மாவட்டத்தின் உதயபுரா பகுதியில் அமைந்துள்ள பிபாரிய புவாரியா கிராமத்தில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பரத் சிங் தாகத், கிராம பஞ்சாய்த்தின் துணைச் செயலாளர் மனோஜ் படேல் மற்றும் ஆசிரியரான சத்யேந்திரா சிங் ரகுவன்ஷி ஆகியோர் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த சந்தோஷ் மெஹ்தார் என்பவரின் வீட்டில் உணவு சாப்பிட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரின் வீட்டில் சாப்பிடுவது பசுவதையை விட பாவச் செயல் என்று தீர்மானம் கொண்டு வந்த கிராம பஞ்சாயத்து நிர்வாகிகள், அவர்கள் மூவரும் கங்கை ஆற்றில் புனித நீராடி, கிராமவாசிகளுக்கு விருந்தளிக்க வேண்டும் என உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, மனோஜ் படேல் மற்றும் சத்யேந்திரா சிங் ஆகிய இருவரும் பஞ்சாயத்து அதிகாரிகளின் உத்தரவைப் பின்பற்றி கங்கையில் நீராடி, கிராமவாசிகளுக்கு விருந்தளித்துள்ளனர். ஆனால், பரத் சிங் தாகத் அவர்களின் கட்டளையின்படி செயல்பட மறுத்ததால் அவரும் அவரது குடும்பத்தினரும் சமூகப் புறக்கணிப்பிற்கு ஆளாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்துடன், பரத் சிங் தாகத் கோயிலுக்குள் செல்வதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து பஞ்சாயத்து அதிகாரிகளிடம் பரத் சிங் முறையிட்டபோது அவர் தனது தலைமுடியை சவரம் செய்துக்கொள்ள வேண்டுமெனவும், உயிரோடு இருக்கும் அவரது தந்தைக்கான மரணச் சடங்குகளை இப்போதே செய்ய வேண்டுமெனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இந்த நிலையில், கிராம பஞ்சாயத்து அதிகாரிகளால் ஒடுக்குமுறைக்கு ஆளாகப்பட்ட பரத் சிங் தாகத், இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் நேற்று (டிச. 9) புகாரளித்துள்ளார்.
இதையடுத்து, விசாரணையில் இந்தக் குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டால், குற்றவாளிகள் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், உதயபுரா சட்டப்பேரவை உறுப்பினர் நரேந்திர சிவாஜி படேல் இந்த விவகாரம் குறித்து கிராமவாசிகளிடம் நடத்திய பேச்சுவார்த்தைகளும் தோல்வியடைந்ததாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், கிராமத்தின் பஞ்சாயத்துத் தலைவர் பகவான் சிங் படேல் இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: 200 முறை வெளிநடப்பு செய்தாலும்... எதிர்க்கட்சியை விமர்சித்த அமித் ஷா பேச்சு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.