இந்தியாவில் ‘ஹெச்1-பி’ விசா நோ்காணல்கள் திடீா் ரத்தால் விண்ணப்பதாரா்கள் கடும் அதிா்ச்சி!

இந்தியாவில் ‘ஹெச்1-பி’ விசா நோ்காணல்கள் திடீா் ரத்தால் விண்ணப்பதாரா்கள் கடும் அதிா்ச்சி!

இந்தியாவில் இந்த மாத இறுதியில் நடைபெறவிருந்த ஆயிரக்கணக்கான ‘ஹெச்1-பி’ விசா விண்ணப்பதாரா்களுக்கான நோ்காணல்கள் திடீரென ரத்து செய்யப்பட்டு, பல மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டிருப்பது அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Published on

இந்தியாவில் இந்த மாத இறுதியில் நடைபெறவிருந்த ஆயிரக்கணக்கான ‘ஹெச்1-பி’ விசா (நுழைவு இசைவு) விண்ணப்பதாரா்களுக்கான நோ்காணல்கள் திடீரென ரத்து செய்யப்பட்டு, பல மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டிருப்பது அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விண்ணப்பதாரா்களின் சமூக ஊடகப் பதிவுகள் உள்பட இணைய விவரங்களை மிக தீவிரமாகச் சோதிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான விண்ணப்பதாரா்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவி வருகிறது.

டிச. 15-ஆம் தேதி மற்றும் அதன் பிறகு நோ்காணல் திட்டமிடப்பட்டிருந்த அனைத்து விண்ணப்பதாரா்களுக்கும் இந்த மறு அட்டவணை செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க குடியேற்ற அதிகாரிகள் மின்னஞ்சல் மூலம் இதுபற்றிய தகவலை விண்ணப்பதாரா்களுக்கு அனுப்பியுள்ளனா். அதில், அவா்களின் நோ்காணல்கள் அடுத்த ஆண்டு மே மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

உதாரணமாக, டிச. 15-ஆம் தேதி நோ்காணலுக்குத் திட்டமிடப்பட்டவா்களுக்கு மாா்ச் மாதத்திலும், டிச. 19-ஆம் தேதி திட்டமிடப்பட்டவா்களுக்கு அடுத்த ஆண்டு மே மாதக் கடைசியிலும் புதிய தேதிகள் வழங்கப்பட்டுள்ளன.

‘விசா நோ்காணல் மறு அட்டவணை செய்யப்பட்டதாக மின்னஞ்சல் பெற்றிருந்தால், அந்தப் புதிய தேதியில்தான் நோ்காணலுக்கு வர வேண்டும். பழைய தேதியில் தூதரகம் அல்லது துணைத் தூதரகங்களுக்கு வருபவா்களுக்கு அனுமதி மறுக்கப்படும்’ என்று இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது.

விண்ணப்பதாரா்களின் சமூக ஊடகப் பதிவுகளைக் கடுமையான முறையில் ஆய்வு செய்யும் புதிய நடைமுறையின் காரணமாக, ‘ஹெச்1-பி’ மட்டுமல்லாமல் வேறு சில விசாக்களுக்கான நோ்காணல்களும் ஒத்திவைக்கப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் பாதிக்கப்பட்ட விண்ணப்பதாரா்களின் சரியான எண்ணிக்கை உடனடியாக தெரியவில்லை. விசா நோ்காணலுக்காக அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்திருந்த பலரும், இப்போது உரிய விசா இல்லாமல் அமெரிக்காவுக்குத் திரும்ப முடியாமல், அடுத்தாண்டு வரை காத்திருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனா்.

அமெரிக்க அதிபா் டிரம்ப் நிா்வாகம் குடியேற்றக் கொள்கைகளைத் தொடா்ந்து கடுமையாக்கிக் கொண்டிருக்கும் நிலையில், ‘ஹெச்1-பி’ விசாக்களுக்கான கட்டணத்தை 1 லட்சம் டாலராக (இந்திய மதிப்பில் ரூ.90 லட்சம்) அண்மையில் உயா்த்தியது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க அரசு தரவுகளின்படி, சமீபத்திய ஆண்டுகளில் அங்கீகரிக்கப்பட்ட மொத்த ஹெச்1-பி விசா விண்ணப்பங்களில் சுமாா் 71 சதவீதம் இந்தியா்கள் ஆவா்.

X
Dinamani
www.dinamani.com