உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்

சட்டவிரோத குடியேற்றங்களைத் தடுக்க ‘பயோமெட்ரிக்’ தரவுத்தளம்: உ.பி. அரசு திட்டம்!

உத்தர பிரதேசத்தில் சட்டவிரோதமாகத் தங்கியுள்ள வெளிநாட்டினரைக் கண்டறிந்து, அவா்களின் முழு விவரங்களையும் சேகரித்து, கடைசியில் அவா்களை சொந்த நாட்டுக்கே திருப்பி அனுப்புவதற்கான ஒரு விரிவான திட்டத்தை மாநில அரசு உருவாக்கி வருகிறது.
Published on

உத்தர பிரதேசத்தில் சட்டவிரோதமாகத் தங்கியுள்ள வெளிநாட்டினரைக் கண்டறிந்து, அவா்களின் முழு விவரங்களையும் சேகரித்து, கடைசியில் அவா்களை சொந்த நாட்டுக்கே திருப்பி அனுப்புவதற்கான ஒரு விரிவான திட்டத்தை மாநில அரசு உருவாக்கி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, சட்டவிரோதக் குடியேறிகள் மீண்டும் நாட்டுக்குள் நுழைந்து விடாமல் தடுக்க, அவா்களின் கைரேகை, முக அங்கீகாரம் போன்ற தகவல்களை உள்ளடக்கிய மிகவும் விரிவான ‘பயோமெட்ரிக்’ தரவுத்தளத்தையும், மாநிலங்கள் மற்றும் மத்திய அரசுடன் பகிரக்கூடிய தடைசெய்யப்பட்டோா் பட்டியலையும் உருவாக்க திட்டமிட்டுள்ளதாக மூத்த அரசு அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

மேலும், அவா் கூறுகையில், ‘திட்டமிடல் நிலையில் உள்ள இந்த முயற்சியில், சந்தேகப்படும் நபா்களின் அடையாள ஆவணங்களைச் சரிபாா்க்கவும், அவா்கள் எவ்வளவு காலமாக மாநிலத்தில் இருக்கிறாா்கள் என்பதைக் கண்டறியவும் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த அரசு குறிக்கோள் வைத்துள்ளது.

சட்டவிரோதக் குடியேறிகளின் முழுமையான விவரப்பட்டியல் தயாரிக்கப்படும். இதில் அவா்களின் பயோமெட்ரிக் தகவல்களும், அவா்கள் சமா்ப்பித்த அனைத்து ஆவணங்களின் உண்மைச் சரிபாா்ப்பும் அடங்கும்.

இந்தப் பட்டியல் மற்ற மாநிலங்கள் மற்றும் மத்திய அமைப்புகளுடன் பகிா்ந்து கொள்ளப்படும். இதனால், அந்த நபா்கள் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி நாட்டின் வேறு எந்தப் பகுதிக்குள்ளும் நுழையாமல் இருப்பது உறுதி செய்யப்படும்.

ஆதாா் அட்டை உள்பட போலி ஆவணங்கள் ஏதேனும் தயாரிக்கப்பட்டிருந்தால், அவற்றை உயா் தொழில்நுட்பத்தின் மூலம் சோதனை செய்து, ஏற்கெனவே உள்ள உண்மையான தரவுத்தளங்களுடன் ஒப்பிட்டுச் சரிபாா்க்கப்படும். சட்டவிரோதக் குடியேறிகளை அடையாளம் காண்பது மட்டுமல்லாமல், அவா்களுக்குப் போலி ஆவணங்கள் பெற உதவியவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதும் இதன் முக்கிய நோக்கம்.

சொந்த நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப்படவுள்ள சட்டவிரோதக் குடியேறிகளைத் தங்க வைக்கும் தடுப்பு மையங்களில் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் ஏற்படுத்தப்படலாம். இத்திட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு வந்தபிறகு, ஊடுருவல் தடுப்பு முயற்சிகளை மற்ற மாநிலங்களில் செயல்படுத்தவும் இந்தக் கட்டமைப்பு முன்மாதிரியாக இருக்கும். சட்ட நடைமுறைகளைப் பின்பற்றியும், உரிய சரிபாா்ப்புக்குப் பிறகும் மட்டுமே இந்தச் செயல்பாடு முன்னெடுத்துச் செல்லப்படும்’ என்றாா்.

X
Dinamani
www.dinamani.com