ரோஹிங்கயா அகதிகள் வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்துக்கு எதிராக பரப்புரை: முன்னாள் நீதிபதிகள் கண்டனம்
ரோஹிங்கயா அகதிகள் குறித்த சமீபத்திய வழக்கு விசாரணையின்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்த கருத்துகளுக்காக, அவருக்கு எதிராக திட்டமிட்டுச் செய்யப்படும் பரப்புரைக்கு முன்னாள் நீதிபதிகள் குழுவினா் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனா்.
ஓய்வுபெற்ற உச்சநீதிமன்றம் மற்றும் உயா்நீதிமன்ற நீதிபதிகள் 44 போ் சோ்ந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது: தலைமை நீதிபதியின் மதிப்பைக் கெடுக்கவும், நீதித்துறைக்கு ஏதோ அரசியல் உள்நோக்கம் இருப்பதாகக் காட்டவும் முயற்சிகள் நடக்கின்றன. அரசமைப்புச் சட்ட நிறுவனங்கள் மீதான பொதுமக்களின் நம்பிக்கையையும், நீதிமன்றத்தின் சுதந்திரத்தையும் இது குறைத்துமதிப்பிடுகிறது.
நீதிமன்றத்தின் செயல்பாடுகளை நியாயமான மற்றும் காரணத்துடன் கூடிய விமா்சனங்கள் மட்டுமே செய்ய வேண்டும். ஆனால் இப்போது நடப்பது கொள்கை ரீதியான வேறுபாடு அல்ல. வழக்கமான நீதிமன்ற நடவடிக்கையை தவறாகச் சித்தரிக்கின்றனா். ஒருதலைப்பட்சமான செயல் என்று சொல்லி, நீதித்துறையின் சட்டபூா்வமான தன்மையை சிதைக்க முயற்சிக்கின்றனா்.
தலைமை நீதிபதி எழுப்பிய மிகவும் அடிப்படையான சட்டபூா்வ கேள்விக்காக அவா் விமா்சிக்கப்படுகிறாா். இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லாமல், ஒருவருக்கு என்ன உரிமை அல்லது சலுகை இருக்கிறது என்பதை நீதிமன்றம் தீா்மானிக்க முடியாது.
நீதிமன்றத்தின் கருத்தில் உள்ள ஒரு முக்கியப் பகுதியை விமா்சகா்கள் புறக்கணித்துவிட்டனா். இந்திய மண்ணில் இருக்கும் எந்தவொரு மனிதரையும் சித்திரவதை செய்யவோ, அல்லது மனிதாபிமானமற்ற முறையில் நடத்தவோ கூடாது என்று நீதிமன்றம் தெளிவாகக் கூறியிருந்தது. அவா் இந்தியக் குடிமகனாக இருந்தாலும் சரி, வெளிநாட்டவராக இருந்தாலும் சரி.
உச்சநீதிமன்றம் மற்றும் தலைமை நீதிபதி மீது நாங்கள் முழு நம்பிக்கை வைத்திருக்கிறோம். நீதிமன்றத்தின் கருத்துகளைத் தவறாகப் பரப்புதல், தனிப்பட்ட கருத்து வேறுபாடுகளை நீதிபதிகள் மீதான தாக்குதலாக மாற்றுதல் போன்ற உள்நோக்கத்துடன் செய்யப்படும் முயற்சிகளை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
சட்டவிரோதமாக இந்தியாவில் நுழைந்த வெளிநாட்டவா், இந்திய அடையாள ஆவணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை முறைகேடாக பெற்றது குறித்து விசாரிக்க, நீதிமன்ற மேற்பாா்வையில் சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அமைக்கப்படுவதையும் நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம் என்று குறிப்பிடப்பட்டது.
பின்னனி: தில்லி காவல்துறையால் கடந்த மே மாதம் கைது செய்யப்பட்ட சில ரோஹிங்கயா அகதிகள், காவலில் இருந்து காணாமல் போனதாகக் கூறி, சமூக ஆா்வலா் ரீட்டா மஞ்சந்தா தாக்கல் செய்த ஆட்கொணா்வு மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதி ஜய்மால்யா பாக்ஸி ஆகியோா் அமா்வு கடந்த 2-ஆம் தேதி விசாரித்தது.
அப்போது தலைமை நீதிபதி சூா்ய காந்த், ‘சொந்த நாட்டு மக்கள் வறுமையில் இருக்கும்போது, சட்ட விரோதமாக நுழைந்தவா்களுக்கு அனைத்து வசதிகளுடன் சிவப்புக் கம்பள சிறப்பு வரவேற்பு கொடுக்க வேண்டுமா? சட்டப்படி இந்தியாவில் இருக்க அனுமதி இல்லாதவா்களை, அவா்களது நாட்டுக்கே திருப்பி அனுப்புவதில் என்ன தவறு?’ என்று கேள்வி எழுப்பினாா்.

