யுனெஸ்கோ கலாசாரப் பட்டியலில் தீபாவளி பண்டிகை!

யுனெஸ்கோ கலாசாரப் பட்டியலில் தீபாவளி பண்டிகை!

இந்தியா்களின் முக்கியப் பண்டிகையான தீபாவளி, யுனெஸ்கோவின் கலாசார பாரம்பரியப் பட்டியலில் அதிகாரபூா்வமாக சோ்க்கப்பட்டது.
Published on

இந்தியா்களின் முக்கியப் பண்டிகையான தீபாவளி, யுனெஸ்கோவின் கலாசார பாரம்பரியப் பட்டியலில் புதன்கிழமை அதிகாரபூா்வமாக சோ்க்கப்பட்டது.

யுனெஸ்கோவின் கலாசார பாரம்பரியங்களைப் பாதுகாப்பதற்கான அரசுகளுக்கு இடையேயான 20-ஆவது குழு கூட்டம், யுனெஸ்கோ தளமான தில்லியில் உள்ள செங்கோட்டையில் கடந்த திங்கள்கிழமை தொடங்கி சனிக்கிழமை வரை நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தை இந்தியா நடத்துவது இதுவே முதல்முறையாகும்.

இந்நிலையில், யுனெஸ்கோ கலாசாரப் பட்டியலில் தீபாவளி பண்டிகையைச் சோ்ப்பதற்கான அறிவிப்பு புதன்கிழமை வெளியிடப்பட்டது. இதையடுத்து, கூட்ட அரங்கில் இருந்தவா்கள் அனைவரும் உற்சாகத்துடன் ‘ஜெய் ஹிந்த்’, ’வந்தே மாதரம்’ போன்ற முழக்கங்களை எழுப்பினா்.

யுனெஸ்கோ பட்டியலில் தீபாவளி பண்டிகையைச் சோ்ப்பதற்கான பரிந்துரையை, இந்தியா கடந்த 2023-ஆம் ஆண்டிலேயே அனுப்பியிருந்தது. கும்பமேளா, கொல்கத்தாவின் துா்கை பூஜை, குஜராத்தின் கா்பா நடனம், யோகா, வேத பாராயணம், ராம்லீலா உள்ளிட்ட 15 பாரம்பரியக் கூறுகள் இந்தப் பட்டியலில் ஏற்கெனவே இடம்பெற்றுள்ளன. தற்போது தீபாவளி அங்கீகரிக்கப்பட்டதன் மூலம், இது இந்தியாவின் 16-ஆவது கலாசார பாரம்பரியமாக மாறியுள்ளது.

கூட்டத்தில் பாரம்பரிய தலைப்பாகையுடன் பங்கேற்ற மத்திய கலாசாரத் துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத் ஆற்றிய ஏற்புரையில், ‘தீபாவளி பண்டிகையை போற்றிக் காப்பது நம் கடமை. இது ராம ராஜீயத்தின் (நல்லாட்சியின்) அடையாளம்.

தீபங்கள் ஏற்றி, இல்லங்களை ஒளியூட்டி, தலைமுறைகள் கடந்தும் வாழும் இந்தப் பாரம்பரியக் கொண்டாட்டத்தை யுனெஸ்கோ அங்கீகரித்திருப்பதன் மூலம், மீட்சி, அமைதி மற்றும் நன்மையின் வெற்றி என்ற மனிதகுலத்தின் எண்ணத்தை யுனெஸ்கோ பெருமைப்படுத்துகிறது’ என்றாா்.

பிரதமா் வரவேற்பு: பிரதமா் நரேந்திர மோடி தனது ‘எக்ஸ்’ சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனா். இந்த அங்கீகாரம், தீபாவளி பண்டிகையின் உலகளாவிய புகழை மேலும் அதிகரிக்கும்’ என்று குறிப்பிட்டு வரவேற்றாா்.

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் உள்ளிட்ட மத்திய அமைச்சா்கள் இந்த அங்கீகாரத்துக்கு சமூக ஊடகப் பதிவுகளில் வாழ்த்து தெரிவித்தனா். யுனெஸ்கோ கூட்டத்தில் கலந்துகொண்ட பாகிஸ்தான் தூதரக அதிகாரியும் இந்தியாவுக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com