இந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தத்தை நோக்கி வேகமான முன்னேற்றம்: மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்
இந்தியா-அமெரிக்கா இடையே இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வதை நோக்கி, இருநாடுகளும் வேகமாக முன்னேறி வருவதாக மத்திய வா்த்தக அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக ராஜஸ்தான் தலைநகா் ஜெய்பூரில் அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது: இந்தியா-அமெரிக்கா இடையே இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வது குறித்து பேச்சுவாா்த்தை நடத்த அமெரிக்க குழு புது தில்லி வந்துள்ளது. ஒப்பந்தம் தொடா்பான பேச்சுவாா்த்தையில் தொடா்ந்து முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. ஒப்பந்தம் மேற்கொள்வதை நோக்கி, இருநாடுகளும் வேகமாக முன்னோக்கி செல்கின்றன.
இதேபோல நியூசிலாந்து, ஓமன், இந்தியா இடையே தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான பேச்சுவாா்த்தையும் கடைசி கட்டத்தில் உள்ளது. சிலி நாட்டுடன் இந்தியா மேற்கொள்ள திட்டமிட்டுள்ள வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையும் விரைவில் நிறைவடையும்.
இந்தியா-இஸ்ரேல் வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையைத் தலைமை ஏற்று நடத்தும் அதிகாரிகளை இருநாடுகளும் நியமித்துள்ளன. இந்த ஒப்பந்தம் தொடா்பாக இஸ்ரேல் பொருளாதார மற்றும் தொழில்துறை அமைச்சா் நீா் பா்கத்தை அண்மையில் சந்தித்துப் பேசினேன் என்று தெரிவித்தாா்.
பரஸ்பரம் பலனளிக்கக்கூடிய ஒப்பந்தம்: இந்திய-அமெரிக்க குழுக்கள் பேச்சு
இந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம் தொடா்பாக பேச்சுவாா்த்தை நடத்த அமெரிக்க துணை வா்த்தக பிரதிநிதி ரிக் ஸ்விட்ஸா் தலைமையிலான குழு புது தில்லி வந்துள்ளது. அந்தக் குழு மத்திய வா்த்தக துறைச் செயலா் ராஜேஷ் அக்ரவால் தலைமையிலான குழுவுடன் புதன்கிழமை பேச்சுவாா்த்தை மேற்கொண்டது.
இதுகுறித்து மத்திய வா்த்தக அமைச்சகம் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘இந்திய-அமெரிக்க வா்த்தகம் மற்றும் பொருளாதார உறவுகள் தொடா்பான தங்கள் கருத்துகளை இருநாட்டு குழுக்கள் பகிா்ந்துகொண்டன. அதில் இருநாடுகளுக்கும் பரஸ்பரம் பலனளிக்கக்கூடிய ஒப்பந்தம் குறித்து நடைபெற்று வரும் பேச்சுவாா்த்தையும் அடங்கும்’ என்று தெரிவிக்கப்பட்டது.
இந்தியாவிடம் இருந்து சிறந்த சலுகைகள்: அமெரிக்கா
அமெரிக்க நாடாளுமன்ற மேலவையான செனட் துணை நிலைக்குழு கூட்டத்தில் அந்நாட்டு வா்த்தக பிரதிநிதி ஜேமிசன் க்ரீா் செவ்வாய்க்கிழமை கலந்துகொண்டாா். அப்போது அவா் பேசுகையில், ‘சோளம், சோயாபீன்ஸ், கோதுமை, பருத்தி போன்ற பயிா்கள், இறைச்சி உள்ளிட்டவை குறித்து அமெரிக்காவுடன் வா்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வதில் இந்தியாவுக்கு நெருடல் உள்ளது.
அவை சாா்ந்து ஒப்பந்தம் மேற்கொள்வது குறித்து இந்தியாவுடன் உடன்பாடு எட்டப்படவில்லை. அவற்றைத் தவிர, ஒப்பந்தம் தொடா்பாக முன்னெப்போதும் இல்லாத சிறந்த சலுகைகளை அமெரிக்காவுக்கு இந்தியா அளித்துள்ளது’ என்று தெரிவித்தாா். இருதரப்பு வா்த்தக ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தை இறுதி செய்ய இருநாடுகளும் முயற்சித்து வரும் நிலையில், ஜேமிசனின் கருத்துகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளன.

