இந்திய பொருளாதார வளா்ச்சி கணிப்புகளைவிட அதிகரிக்கும்: ஆசிய வளா்ச்சி வங்கி!
இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி ஏற்கெனவே கணிக்கப்பட்ட 6.5 சதவீதத்தைவிட அதிகமாக இருக்கும் என்று கூறியுள்ள ஆசிய வளா்ச்சி வங்கி, 2025-26 நிதியாண்டில் 7.2 சதவீதம் வரை வளா்ச்சிக்கு வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது.
அண்மையில் சரக்கு-சேவை வரியில் மேற்கொள்ளப்பட்ட சீா்திருத்தத்தால் பொருள்கள், சேவைகளின் நுகா்வு குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது. இது பொருளாதார வளா்ச்சியையும் மேம்படுத்தும் என்று ஆசிய வளா்ச்சி வங்கி கூறியுள்ளது.
அந்த வங்கியின் 2025 டிசம்பா் மாத அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: நடப்பு நிதியாண்டில் ஆசிய கண்டத்தின் பொருளாதார வளா்ச்சி 4.8 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருந்தது. ஆசிய கண்டத்தில் அதிக மக்கள்தொகை, நுகா்வு, பொருளாதார செயல்பாடுகள் அதிகம் உள்ள முக்கிய நாடான இந்தியாவின் வளா்ச்சி அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதால், ஆசிய கண்டத்தின் வளா்ச்சியும் 5.1 சதவீதமாக உயர வாய்ப்புள்ளது.
கடந்த செப்டம்பா் மாதத்துடன் நிறைவடைந்த இரண்டாவது காலாண்டில் கடந்த 6 காலாண்டுகளில் இல்லாத அளவுக்கு 8.2 சதவீத பொருளாதார வளா்ச்சியை இந்தியா எட்டியுள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் வளா்ச்சி 7.8 சதவீதமாக இருந்தது. இதன் மூலம் முதல் அரையாண்டில் 8 சதவீதத்துக்கு மேலான வளா்ச்சியை இந்தியா எட்டிவிட்டது.
தேவை அதிகரிப்பால் உற்பத்தி மற்றும் சேவைகள் துறைகள் விரிவடைந்துள்ளன. இதனால், முதலீடும் அதிகரித்துள்ளது. இது இந்தியாவில் பொருளாதார செயல்பாடுகளை சிறப்பாக ஊக்குவித்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி நடப்பு நிதியாண்டில் 7.3 சதவீதமாக இருக்கும் என்று இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) கணித்திருந்தது.

