

புது தில்லி: வாக்குத் திருட்டு மூலமே நேருவும், இந்திராவும் நாட்டின் பிரதமரானார்கள் என்றும், குடியுரிமை பெறுவதற்கு முன்பே, சோனியா காந்தி வாக்களித்ததாகவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.
நாடாளுமன்றத்தில் நடைபெறும் சிறப்பு தீவிர திருத்தம் மீதான விவாதத்தின்போது மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார்.
அப்போது, வாக்குத் திருட்டு குறித்து ராகுல் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் பேசிய அவர், காங்கிரஸ் தலைவர்களான நேருவும், இந்திராவும் வாக்குத் திருட்டு மூலமே வெற்றி பெற்று பிரதமரானார்கள். சோனியா காந்தி, இந்திய குடியுரிமை பெறும் முன்பே தேர்தலில் வாக்களித்ததாக வழக்கு உள்ளதாக மக்களவையில் கூறினார்.
மேலும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், ராஜீவ் காந்தி காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால், இவர்கள் ராஜீவ் காந்தியையும் ஏற்கவில்லை. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு எதிரான மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அந்த தீர்ப்பையும் இவர்கள் ஏற்கவில்லை என்று அமித் ஷா பேசினார்.
அமித் ஷாவின் பேச்சுக்கு காங்கிரஸ் மற்றும் திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
அமித் ஷா கூறும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி.க்கள் கோஷம் எழுப்பினர்.
தொடர்ந்து பேசிய அமித் ஷா, இனி, வாக்குப் பெட்டிகளை எடுத்துச் சென்று ஊழல் நடைமுறைகளால் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்பதால் எதிர்க்கட்சிகள் கவலைப்படுகின்றன. பிரதமர் மோடியின் சுற்றுப்பயணத் திட்டத்துக்கும் தேர்தல் தேதிகள் அறிவிப்புக்கும் இதுவரை எந்த தொடர்பும் இருந்ததே இல்லை; பிரதமர் எப்போதும் மக்களுடனேயேதான் இருக்கிறார்.
கடந்த 2004 ஆம் ஆண்டு முதல்முறையாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன, பின்னர் 2009 ஆம் ஆண்டு, காங்கிரஸ் இரண்டு தேர்தல்களிலும் வெற்றி பெற்றது, ஆனால் 2014 தோல்விக்குப் பிறகுதான் அவர்கள் புகார் செய்யத் தொடங்கினர் என்றும் அமித் ஷா பேசினார்.
தேர்தல் தோல்வியின் வரலாறு 2014 ஆம் ஆண்டில் இருந்து தொடங்கியது, காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில்1989 இல் ராஜீவ் காந்தியால் கொண்டு வரப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அவர்களே குற்றம் சாட்டினர். ஆனால், தேர்தல் தோல்விகளுக்குக் காரணம் உங்கள் தலைமைதானே தவிர, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரமோ அல்லது வாக்காளர் பட்டியல்களோ அல்ல என்றும் உள்துறை அமைச்சர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.