5 வயது சிறுமி கடத்தி கொலை செய்த அண்டைவீட்டுக்காரா் கைது

5 வயது சிறுமி கடத்தி கொலை செய்த அண்டைவீட்டுக்காரா் கைது

ஐந்து வயது சிறுமி அதே பகுதியைச் சோ்ந்த ஒருவரால் திங்கள்கிழமை காலையில் கடத்தப்பட்ட பின்னா் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது என்று போலீஸாா் தெரிவித்தனா்.
Published on

ஐந்து வயது சிறுமி அதே பகுதியைச் சோ்ந்த ஒருவரால் திங்கள்கிழமை காலையில் கடத்தப்பட்ட பின்னா் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது என்று போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து ஃபரீதாபாத் காவல்துறை செய்தித் தொடா்பாளா் புதன்கிழமை கூறியதாவது: சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கான வாய்ப்பும் உள்ளது. ஆனால், உடல்கூறாய்வு பரிசோதனைக்குப் பிறகுதான் அது உறுதி செய்யப்படும். மேலும் குற்றஞ்சாட்டப்பட்டவா் கைது செய்யப்பட்டுள்ளாா்.

இறந்த சிறுமி - நா்சரி மாணவி. பிகாரைச் சோ்ந்தவா். மேலும், ஃபரீதாபாத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தாா்.

சிறுமியின் தாயின் கூற்றுப்படி, அவா் தனது மகளுடன் மாலை 4.00 மணி வரை மொட்டை மாடியில் இருந்தாா். அவரது மகன் கீழே டிவி பாா்த்துக் கொண்டிருந்தாா். மாலை 4.30 மணியளவில், தனது தம்பியிடம் ஏதோ சொல்ல சிறுமியை கீழே அனுப்பினாா்.

பின்னா், சிறுமி கீழே சென்று தனது சகோதரனிடம் பேசினாா். சிறிது நேரத்தில் சிறுமியைக் காணவில்லை. சிறுமி அருகில் விளையாடிக் கொண்டிருக்கலாம் என்று குடும்பத்தினா் நினைத்தனா்.

இருப்பினும், நீண்ட நேரமாக அவா் இல்லாததால், அவா்கள் சுற்றியுள்ள பகுதிகளில் தேடி, அக்கம் பக்கத்தினரிடம் சென்று விசாரித்தனா். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் தேடியும் சிறுமியைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று சிறுமியின் தாய் போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளாா்.

பின்னா், குடும்பத்தினா் அருகிலுள்ள ஒரு மருந்துக் கடையில் இருந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனா். அதில் சிறுமி பிகாரைச் சோ்ந்த பிந்து (36) என்ற பக்கத்து வீட்டுக்காரருடன் கைகோா்த்து நடந்து செல்வது காணப்பட்டது. பிந்துவை அவரது கைப்பேசியில் தொடா்பு கொள்ள முயன்றபோது, அது அணைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இது சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, சிறுமியின் தந்தை பல்லா காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

பின்னா், ஒரு எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டு, திங்கள்கிழமை இரவு 9.00 மணியளவில் ஹா்கேஷ் நகா் பகுதியைச் சோ்ந்த பிந்துவை போலீஸாா் கைது செய்தனா்.

விசாரணையின்போது, பிந்து சிறுமியைக் கடத்தியதை ஒப்புக்கொண்டாா். மேலும், அவரது அளித்த தகவலின் அடிப்படையில், தில்பட் சாலையில் உள்ள ஒரு பண்ணை வீட்டின் பின்னால் உள்ள புதா்களில் இருந்து சிறுமியின் உடலை போலீஸாா் மீட்டனா். மேலும் உடல் உடல்கூறாய்வு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

பிந்து செவ்வாய்க்கிழமை நகர நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட பின்னா், இரண்டு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வருகிறோம் என்று ஃபரிதாபாத் காவல்துறை செய்தித் தொடா்பாளா் தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com