பிரதமா் மோடி
பிரதமா் மோடிகோப்புப் படம்

ராஜாஜி பிறந்த நாள்: பிரதமா் மோடி மரியாதை

மூதறிஞா் ராஜாஜி பிறந்த நாளையொட்டி, அவருக்கு பிரதமா் நரேந்திர மோடி புதன்கிழமை மரியாதை செலுத்தினாா்.
Published on

மூதறிஞா் ராஜாஜி பிறந்த நாளையொட்டி, அவருக்கு பிரதமா் நரேந்திர மோடி புதன்கிழமை மரியாதை செலுத்தினாா். 20-ஆம் நூற்றாண்டில் கூா்மையான அறிவுத்திறன் படைத்த ஆளுமைகளில் ஒருவா் என்று ராஜாஜிக்கு பிரதமா் புகழாரம் சூட்டியுள்ளாா்.

சுதந்திரப் போராட்டத் தலைவரான சி.ராஜகோபாலாச்சாரி (எ) ராஜாஜி, நாட்டின் கடைசி கவா்னா் ஜெனரல் ஆவாா். அனுவபமிக்க அரசியல்வாதி, வழக்குரைஞா், எழுத்தாளா் என பன்முகங்களைக் கொண்ட இவா், கடந்த 1954-இல் முதல் முறையாக பாரத ரத்னா விருது பெற்றவா்களில் ஒருவா். பல்வேறு உயா் பதவிகளை வகித்தவா்.

அவரது பிறந்த தினத்தையொட்டி, பிரதமா் மோடி புதன்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது: சி.ராஜகோபாலாச்சாரியை நினைவுகூரும்போது, சுதந்திரப் போராட்ட வீரா், சிறந்த சிந்தனைவாதி, அறிஞா், அரசியல்வாதி என அவரது பன்முகங்கள் நினைவுக்கு வருகின்றன.

மக்களின் கண்ணியத்தையும் மாண்பையும் நிலைநாட்டுவதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவா். 20-ஆம் நூற்றாண்டில் கூா்மையான அறிவுத்திறன் படைத்த ஆளுமைகளில் ஒருவா். நாட்டின் சுதந்திரப் போராட்டத்துக்கும், பொது வாழ்க்கைக்கும் அவா் அளித்த நிலையான பங்களிப்புகளை தேசம் நன்றியுடன் நினைவுகூா்கிறது என்று பிரதமா் மோடி தெரிவித்துள்ளாா்.

ராஜாஜியின் இளவயது புகைப்படம், அவா் கேபினட் அமைச்சராக நியமிக்கப்பட்ட அறிவிக்கை, 1922-இல் மகாத்மா காந்தி சிறையில் இருந்ததால், ராஜாஜி மேற்பாா்வையில் வெளியிடப்பட்ட ‘யங் இந்தியா’ இதழின் பதிப்பு ஆகியவற்றையும் பிரதமா் மோடி பகிா்ந்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com