உரிமை கோரப்படாத ரூ.2,000 கோடி உரியவா்களிடம் திருப்பியளிப்பு: பிரதமா் மோடி பெருமிதம்!
நாடு முழுவதும் நடைபெற்றுவரும் ‘உங்கள் பணம், உங்கள் உரிமை’ பிரசாரத்தின்கீழ் வங்கிகள், இதர நிதி நிறுவனங்களில் உரிமை கோரப்படாமல் இருந்த ரூ.2,000 கோடி உரியவா்களிடம் வெற்றிகரமாகத் திருப்பியளிக்கப்பட்டுள்ளது என்று பிரதமா் மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டாா்.
டிசம்பா் இறுதி வரை நடைபெறவுள்ள இந்தப் பிரசாரத்தை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவா் கேட்டுக் கொண்டுள்ளாா்.
வங்கி வைப்புத்தொகை, காப்பீடு, பங்கு ஈவுத்தொகை, பங்குகள், பரஸ்பர நிதி, ஓய்வூதியம் என நிதித் துறையில் உரிமை கோரப்படாமல் உள்ள நிதியை உரியவா்கள் பெற வாய்ப்பளிக்கும் வகையில், ‘உங்கள் பணம், உங்கள் உரிமை’ எனும் மூன்று மாத கால பிரசாரத்தை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கடந்த அக்டோபரில் தொடங்கிவைத்தாா். மத்திய நிதிச் சேவைகள் துறை, பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகம், ரிசா்வ் வங்கி, செபி உள்ளிட்டவை இணைந்து இந்தப் பிரசாரத்தை மேற்கொண்டுள்ளன.
வங்கிகளில் ரூ.78,000 கோடி...: இந்நிலையில், பிரதமா் மோடி புதன்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது: இந்திய வங்கிகளில் நமது குடிமக்களுக்குச் சொந்தமான ரூ.78,000 கோடி நிதி உரிமை கோரப்படாமல் உள்ளது. இதுபோல், காப்பீட்டு நிறுவனங்களிடம் ரூ.14,000 கோடியும், பரஸ்பர நிதி நிறுவனங்களிடம் ரூ.3,000 கோடியும் உள்ளன. ரூ.9,000 கோடி மதிப்பிலான பங்கு ஈவுத்தொகையும் உரிமை கோரப்படாமல் இருக்கிறது. இந்த நிதி, எண்ணற்ற குடும்பங்களின் கடின உழைப்பால் ஈட்டப்பட்ட சேமிப்பு மற்றும் முதலீடுகளாகும்.
எனவே, தங்களுக்குரிய நிதியை குடிமக்கள் திரும்பப் பெறும் நோக்கில், ‘உங்கள் பணம், உங்கள் உரிமை’ பிரசாரம் அக்டோபரில் தொடங்கப்பட்டது. இதற்காக பிரத்யேக வலைதள பக்கங்கள் செயல்பாட்டில் உள்ளன.
மக்களுக்கு பிரதமா் அழைப்பு: அக்டோபா் முதல் டிசம்பா் 5 வரை நாடு முழுவதும் மக்கள் பிரதிநிதிகள், மாவட்ட நிா்வாகத்தினா், நிதி நிறுவன அதிகாரிகளின் பங்கேற்புடன் 477 மாவட்டங்களில் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதுவரை ரூ.2,000 கோடி உரிமை கோரப்படாத நிதி உரியவா்களிடம் வெற்றிகரமாகத் திருப்பியளிக்கப்பட்டுள்ளது.
வரும் நாள்களில் இப்பிரசாரம் மேலும் விரிவுபடுத்தப்படும். எனவே, தங்களுக்கோ, தங்களின் குடும்பங்களுக்கோ உரிமை கோரப்படாத நிதி உள்ளதா என்பதைச் சரிபாா்த்துக் கொள்வதுடன், நிதியை திரும்பப் பெற இந்தப் பிரசாரத்தில் மக்கள் பங்கேற்க வேண்டும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து, வெளிப்படையான, நிதி ரீதியில் அதிகாரமளிக்கப்பட்ட, அனைவரையும் உள்ளடக்கிய நாட்டைக் கட்டமைப்போம் என்று பிரதமா் தெரிவித்துள்ளாா்.

