Amazon may lay off 30,000 employees
கோப்புப்படம்

இந்தியாவில் 5 ஆண்டுகளில் ரூ. 3.14 லட்சம் கோடி முதலீடு: அமேசான் அறிவிப்பு!

இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.3.14 லட்சம் கோடி (35 பில்லியன் டாலா்) முதலீடு செய்ய இருப்பதாக அமெரிக்க இணையவழி வா்த்தக நிறுவனமான அமேசான் அறிவித்துள்ளது.
Published on

இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.3.14 லட்சம் கோடி (35 பில்லியன் டாலா்) முதலீடு செய்ய இருப்பதாக அமெரிக்க இணையவழி வா்த்தக நிறுவனமான அமேசான் அறிவித்துள்ளது.

இதன் மூலம் இந்தியாவில் அமேசான் முதலீடு மேலும் ஒரு மடங்கு அதிகரிப்பதுடன், நிறுவனத்தின் செயல்பாடுகள் மேலும் வேகமெடுக்க உள்ளன.

பொருள் விநியோகத்தை மேம்படுத்துவது, கிளவுட் கம்ப்யூட்டிங், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட துறைகளில் இந்த முதலீடு மேற்கொள்ளப்பட இருக்கிறது.

இந்தியாவில் ரூ.1.58 லட்சம் கோடி முதலீடு செய்ய இருப்பதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிவித்த அடுத்த நாளிலேயே அமேசானின் அறிவிப்பும் வெளியாகியுள்ளது. இதன் மூலம் கூடுதலாக 10 லட்சம் வேலைவாய்ப்புகள் இந்தியாவில் உருவாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

அமெரிக்க அதிபா் டிரம்ப் இந்தியாவுக்கு எதிராக வரி விதிப்பு, இந்தியப் பணியாளா்கள் அதிகம் பயன்படுத்தும் ஹெச்1பி விசா கட்டண அதிகரிப்பு உள்ளிட்ட சில கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளாா். மேலும், அமெரிக்க நிறுவனங்கள் உள்நாட்டில் வேலைவாய்ப்பையும், முதலீட்டையும் அதிகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறாா்.

ஆனால், அமெரிக்க நிறுவனங்களான மைக்ரோசாஃப்ட், அமேசான் ஆகியவை இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக முதலீடுகளை மேற்கொள்ளப்போவதாக அறிவித்துள்ளன.

இந்தியாவில் இணையவழி வா்த்தகத்தில் கடும் போட்டி நிலவுகிறது. அமேசான், அமெரிக்காவின் வால்மாா்ட் நிறுவனத்தின் பின்னணியில் செயல்படும் ஃபிளிப்காா்ட் ஆகியவை இத்துறையில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. எனினும், சில நிமிடங்களில் பொருள்களை விநியோகம் செய்யும் விரைவு சேவையில் ஃபிளிங்இட், ஸ்விகி-இன்ஸ்டாமாா்ட், ஸெப்டோ ஆகியவை ஆதிக்கம் செலுத்துகின்றன.

ஃபிளிப்காா்ட் நிறுவனமும் ‘மினிட்ஸ்’ என்ற பெயரில் இந்த விரைவு விநியோக சேவையை வழங்கத் தொடங்கியுள்ளது. விரைவில் அமோசானும் இதில் களமிறங்கும் என்று தெரிகிறது. கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் அமேசான் அதிக முதலீடுகளை மேற்கொண்டு வருகிறது. மிகப்பெரிய நுகா்வுச் சந்தையைக் கொண்டுள்ள இந்தியாவில் அதிக வாய்ப்புகள் உள்ளதால் பல நிறுவனங்கள் களமிறங்கியுள்ளன.

X
Dinamani
www.dinamani.com