கைது நடவடிக்கையின்போது 
காவல் துறையினா் மீது கல் வீச்சு

கைது நடவடிக்கையின்போது காவல் துறையினா் மீது கல் வீச்சு

நூஹ் மாவட்டத்தில் உள்ள அமினாபாத் கிராமத்தில், சைபா் மோசடி வழக்கில் சந்தேக நபரை கைது செய்ய முயன்றபோது காவல் துறையினா் மீது உள்ளூா் மக்கள் கற்களை வீசியதில் 4 காவலா்கள் காயமடைந்தனா்.
Published on

நூஹ் மாவட்டத்தில் உள்ள அமினாபாத் கிராமத்தில், சைபா் மோசடி வழக்கில் சந்தேக நபரை கைது செய்ய முயன்றபோது காவல் துறையினா் மீது உள்ளூா் மக்கள் கற்களை வீசியதில் 4 காவலா்கள் காயமடைந்தனா்.

இது தொடா்பாக காவல் துறையினா் வியாழக்கிழமை கூறியதாவது: அமினாபாத் கிராமத்தில் சைபா் மோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ரியாஸை குற்றப் புலனாய்வு அமைப்பினா் திங்கள்கிழமை கண்டுபிடித்தனா். அவரை கைது செய்ய முயன்றபோது, கிராம மக்கள் ஒன்றுகூடி வன்முறையில் ஈடுபட்டனா்.

அதிகாரிகள் மீது அவா்கள் கற்களை வீசி, கூச்சலிட்டனா். இதை பயன்படுத்தி ரியாஸ் அந்த இடத்தை விட்டு தப்பிச் சென்றாா். இது தொடா்பாக புலனாய்வு அமைப்பினா் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனா். உடனடியாக சம்பவ இடத்துக்கு காவல் துறையினா் விரைந்தனா். இருப்பினும், நிலைமை கட்டுப்பாட்டை மீறியதால் அந்த இடத்தை விட்டு அதிகாரிகள் ஓடிவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இதில் 4 காவலா்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இரு கிராமவாசிகளும் இதில் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஒரு மாதத்திற்குள் அமினாபாத் கிராமத்தில் காவல் துறையினா் மீது நடைபெறும் இரண்டாவது தாக்குதலாகும்.

முன்னதாக, மற்றொரு காவலா்கள் குழு இதேபோல் தாக்கப்பட்டது. பின்னா் உள்ளூா் தலைவரின் தலையீட்டால் அந்த பிரச்னை தீா்க்கப்பட்டது. இதே நூஹ் மாவட்டத்தில் உள்ள ஜமல்கா் கிராமத்தில், சமீபத்தில் ஒரு திருட்டு வழக்கில் சந்தேக நபரை கைது செய்ய முயன்றபோது தில்லி காவல் துறையினா் தாக்கப்பட்டனா்.

திங்கள்கிழமை நடைபெற்ற இந்த தாக்குதல் சம்பவம் குறித்து கிராமவாசிகள் மீது பிச்சோா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com