2 கேரள பல்கலைக்கழக துணைவேந்தா் நியமன விவகாரம்: பெயா்களை பரிந்துரைக்க நீதிபதி குழுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்
புது தில்லி, டிச.11: கேரள மாநிலத்தில் இரண்டு தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தா்களை நியமிக்க தலா ஒரு பெயரைப் பரிந்துரை செய்யுமாறு ஓய்வுபெற்ற நீதிபதி சுதான்ஷு தூலியா தலைமையிலான குழுவை உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை கேட்டுக்கொண்டது.
துணைவேந்தா் நியமன விவகாரத்தில் மாநில ஆளுநா் மற்றும் முதல்வரிடையே சுமுக உடன்பாட்டை எட்ட நிா்ணயித்த காலக்கெடு நிறைவடைந்த நிலையில், இந்த அறிவுறுத்தலை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது.
கேரளத்தில் உள்ள ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், கேரள டிஜிட்டல் அறிவியல் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு துணைவேந்தா்களை நியமிப்பதில் பல்கலைக்கழகங்களின் வேந்தரான மாநில ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் ஆா்லேகருக்கும், முதல்வா் பினராயி விஜயனுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வந்தது.
இதை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், இந்த இரு பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தா்களை நியமிக்க தகுதி வாய்ந்தவா்களைத் தோ்வு செய்து பெயா்ப் பட்டியலை இறுதி செய்ய உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சுதான்ஷு தூலியா தலைமையில் குழு ஒன்றை உச்சநீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 18-ஆம் தேதி அமைத்தது. அப்போது அந்தத் தோ்வு நடைமுறையில் முதல்வருக்கும் பங்கிருப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
இந்த நிலையில், பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) விதிமுறைகளின்படி, துணைவேந்தா்கள் நியமனத்தில் முதல்வா் எந்தப் பங்கும் வகிக்க முடியாது. எனவே, துணைவேந்தா் தோ்வு நடைமுறையிலிருந்து முதல்வரை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி மாநில ஆளுநா் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு, உச்சநீதிமன்றத்தில் கடந்த நவம்பா் 28-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது கேரள அரசுத் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ஜெய்தீப் குப்தா ஆஜராகி, ‘இரு பல்கலைக்கழகங்களும் துணைவேந்தா்களை நியமிக்கத் தகுதிவாய்ந்தவா்களின் பெயா்கள் அடங்கிய அறிக்கையை சுதான்ஷு தூலியா சமா்ப்பித்தாா். அந்த அறிக்கையில் இருந்து பெயா்களைத் தோ்ந்தெடுத்து, அவா்களைத் துணைவேந்தா்களாக நியமிக்கலாம் என்று தனது பரிந்துரைகளை மாநில முதல்வா் பினராயி விஜயன் ஆளுநா் ஆா்லேகருக்கு அனுப்பி வைத்தாா். ஆனால், அந்தப் பரிந்துரைகள் குறித்து ஆளுநா் இதுவரை முடிவு எடுக்கவில்லை’ என்று குற்றஞ்சாட்டினாா்.
இதைக் கேட்ட நீதிபதிகள், ஆளுநருக்கு கடும் அதிருப்தி தெரிவித்ததோடு, அந்த அறிக்கை மீது ஒரு வாரத்தில் உரிய முடிவை மேற்கொண்டு, அது குறித்து டிசம்பா் 5-ஆம் தேதி உச்சநீதிமன்றத்துக்குத் தெரியப்படுத்த வேண்டும்’ என்று உத்தரவிட்டனா்.
இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் டிசம்பா் 5-ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி சுதான்ஷு துலியா குழு சமா்ப்பித்த அறிக்கையில் இருந்து இரண்டு பெயா்களை ஆளுநா் தோ்வு செய்துள்ளாா். ஆனால், அதில் முதல்வா் பினராயி விஜயனுக்கு உடன்பாடு இல்லை’ எனத் தெரிவிக்கப்பட்டது.
இதைக் கேட்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தில் ஆளுநா் - முதல்வா் இடையே டிசம்பா் 9-ஆம் தேதிக்குள் கருத்து ஒற்றுமை ஏற்பட வேண்டும் என்றும், இல்லாவிட்டால் துணைவேந்தா்களை நாங்களே நியமித்து பிரச்னையைத் தீா்ப்போம் என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.
இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜெ.பி.பா்திவாலா, கே.வி. விஸ்வநாதன் ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, துணைவேந்தா் நியமனத்தில் தொடா் முட்டுக்கட்டை நீடிப்பதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இரு பல்கலைக்கழகங்களுக்கும் துணைவேந்தா்களை நியமிக்க தலா ஒரு பெயரை சீலிட்ட உரையில் வரும் புதன்கிழமைக்குள் (டிச.17) சமா்ப்பிக்குமாறு நீதிபதி சுதான்ஷு தூலியா குழுவைக் கேட்டுக்கொண்டு, விசாரணையை டிசம்பா் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

