

கேரளத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றுவரும் நிலையில் கும்படாஜேவில் எல்டிஎஃப் உள்ளாட்சித் தேர்தல் வேட்பாளர் ஒருவருக்குச் சொந்தமான நிலத்தில் நான்கு நாட்டு வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
காவல்துறையின் தகவலின்படி, தேர்தலில் போட்டியிடும் கே. பிரகாஷ் என்பவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் இருந்து இந்த வெடிகுண்டுகள் மீட்கப்பட்டன.
வேட்பாளர் பிரகாஷின் வளர்ப்பு நாய் அந்த வெடிகுண்டைக் கடித்த நிலையில், தூக்கி வீசப்பட்டு நாய் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. பிரகாஷ் உடனடியாக காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். தேடுதல் வேட்டையின் போது மேலும் மூன்று வெடிகுண்டுகள் மீட்கப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
முதற்கட்ட விசாரணையில், காட்டுப் பன்றிகளைக் கொல்வதற்காக இந்த வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருக்கலாம் என்று காவல்துறை கூறுகிறது. ஆனால் மேலதிக விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.
பிரகாஷின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தனது நிலத்தில் வெடிகுண்டுகள் இருப்பது தனக்குத் தெரியாது என்று அவர் கூறியதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
படியடுக்கா காவல்துறை வெடிபொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றது.
காட்டுப் பன்றிகள் அடிக்கடி பயிர்களை அழிப்பதால், சில விவசாயிகள் அவற்றைக் கொல்ல சட்டவிரோத முறைகளைக் கையாள்கின்றனர் என்று படியடுக்கா காவல் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கேரளத்தில் உள்ளாட்சித் தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், இன்று இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது.
இதையும் படிக்க: பேரவைத் தேர்தலில் போட்டியிட டிச. 15 முதல் விருப்ப மனு: அதிமுக
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.