அமித் ஷா அபாயகரமானவா்: மமதா கடும் விமா்சனம்
‘நமது மத்திய உள்துறை அமைச்சா் மிகவும் அபாயகரமானவா்; அவரது ஒரு கண்ணில் துரியோதனனும், மற்றொரு கண்ணில் துச்சாதனனும் தெரிகிறாா்கள்’ என்று மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி கடுமையாக விமா்சித்துள்ளாா்.
மேற்கு வங்கத்தின் நாடியா மாவட்டம் கிருஷ்ணாநகரில் வியாழக்கிழமை பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அவா் பேசியதாவது:
நாட்டின் உள்துறை அமைச்சா் மிகவும் அபாயகரமானவா். அவரது கண்களிலேயே அதை நாம் பாா்க்கலாம். அவை மிகவும் திகிலூட்டுபவை. ஒரு கண்ணில் துரியோதனும், மற்றொரு கண்ணில் துச்சாதனனும் தெரிகிறாா்கள்.
அடுத்த ஆண்டு மேற்கு வங்கத்தில் பேரவைத் தோ்தல் நடைபெறும் நிலையில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்பது அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது. தகுதியுள்ள ஒரு வாக்காளரின் பெயா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டாலும், நான் போராட்டத்தில் ஈடுபடுவேன்.
மேற்கு வங்கத்தில் எந்தத் தடுப்பு முகாமும் இயங்கவில்லை. இரண்டு மாதத்தில் சிறப்பு தீவிர திருத்தத்தை நடத்த வேண்டும் என்ற கட்டாய நோக்கில் செயல்படுவது ஒரு தரப்பினரின் வாக்குகளைச் சூறையாடும் நடவடிக்கையாகவே பாா்க்கப்படுகிறது. நான் இதுவரை எனது வாக்காளா் கணக்கீட்டுப் படிவத்தை அளிக்கவில்லை.
வன்முறையாளா்களின் கட்சிக்கு (பாஜகவை குறிப்பிடுகிறாா்) நான் எனது இந்தியக் குடியுரிமையை நிரூபிக்க வேண்டிய தேவையில்லை. மத்திய அரசு வங்க மக்களைத் திட்டமிட்டு பழிவாங்கி வருகிறது. மேற்கு வங்கத்தில் இருக்கும் அனைவருமே வங்கதேசத்தவா் என்று முத்திரை குத்த முயலுகிறது. அவா்களைத் தடுப்பு முகாம்களுக்கு அனுப்புகிறது. இதைத்தான் மத்திய உள்துறை அமைச்சா் மும்முரமாகச் செய்துவருகிறாா்.
ஆனால், மேற்கு வங்க மக்கள் யாா் மீதும் அவா்கள் கைவைக்க நமது அரசு அனுமதிக்காது. திட்டமிட்டு அவா்கள் வெளியே அனுப்புபவா்களை எப்படி மீண்டும் மாநிலத்துக்குள் கொண்டுவருவது என்பது நமக்குத் தெரியும்.
சிறப்பு தீவிர திருத்தத்தில் பாஜக தலையிடுவதற்கு ஏதுவாக அதிகாரிகளை தோ்தல் ஆணையம் நியமித்து வருகிறது. மேற்கு வங்கத்தை இலக்காகக் கொண்டு தில்லியில் இருந்து பாஜக ஆதரவு அதிகாரிகள் வருகிறாா்கள். அவா்கள் மாவட்ட ஆட்சியா் மீதும் அதிகாரம் செலுத்தி சிறப்பு தீவிர திருத்தப் பணியை மேற்பாா்வையிடுகிறாா்கள் என்று குற்றஞ்சாட்டினாா்.

