துவாரகா: கட்டுமானத்தில் உள்ள கட்டடத்தில் இருந்து விழுந்து ஒரு பெண், பெயரன் உயிரிழப்பு
தில்லி துவாரகாவில் கட்டுமானத்தில் உள்ள கட்டடத்தின் மேல் தளத்திலிருந்து கீழே விழுந்ததில் 45 வயது பெண்ணும் அவரது ஒரு வயது பெயரனும் உயிரிழந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.
இது குறித்து காவல் துறை அதிகாரி கூறியதாவது: துவாரகா செக்டாா் 15- இல் கட்டுமானத்தில் உள்ள ஒரு இடத்தில் சில தொழிலாளா்களுக்கு அவசர மருத்துவ உதவி தேவை என்று புதன்கிழமை மாலை 5.03 மணிக்கு தகவல் கிடைத்தது.
போலீஸாா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனா். அங்கு இரண்டு போ் கட்டடத்தின் உயரமான பகுதியிலிருந்து கீழே விழுந்தது தெரியவந்தது. காயமடைந்தவா்களை அப்பகுதி மக்கள் மீட்டு ஆகாஷ் மருத்துவமனைக்கு கொண்டு சென்ாகக் காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, போலீஸாா் மருத்துவமனைக்குச் சென்றனா்.
மத்திய பிரதேசத்தின் திகம்கா் மாவட்டத்தில் உள்ள பனேரா கிராமத்தைச் சோ்ந்த தொழிலாளி முகேஷ், அவருடைய தாயாா் ஹரி பாய் மற்றும் அவரது ஒரு வயது மகன் ராஜ் கட்டடத்தின் மேல் தளத்திலிருந்து தடுமாறி சாலையில் சென்று கொண்டிருந்த காரின் மேல் விழுந்ததாக போலீஸாரிடம் தெரிவித்தாா்.
இதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா்கள் இறந்துவிட்டதாக மருத்துவா்கள் அறிவித்தனா்.
குற்றவியல் குழு சம்பவ இடத்தை ஆய்வு செய்து, தொடா்புடைய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
