இந்திய பொருள்கள் மீது 50% வரை சுங்க வரி உயா்வு: மெக்ஸிகோ அரசு ஒப்புதல்
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நூற்றுக்கணக்கான பொருள்களுக்கு அடுத்த ஆண்டு முதல் 50 சதவீதம் வரை புதிய சுங்க வரியை விதிக்க மெக்ஸிகோ அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
மெக்ஸிகோவுடன் முறையான வா்த்தக ஒப்பந்தம் இல்லாத இந்தியா, சீனா உள்பட ஆசிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 1,400-க்கும் மேற்பட்ட பொருள்களுக்கு, இந்த வரி உயா்வை விதிக்கும் பரிந்துரையை மெக்ஸிகோ நாடாளுமன்ற செனட் அவை அண்மையில் அங்கீகரித்துள்ளது. மெக்ஸிகோவில் உள்ளூா் வேலைவாய்ப்பையும், உள்நாட்டு உற்பத்தியையும் பாதுகாப்பதுதான் இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இந்தத் திடீா் சுங்க வரி உயா்வு, ஆசிய நாடுகளின் ஏற்றுமதியைக் கணிசமாக பாதிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இந்தியாவைச் சோ்ந்த வாகனத் தயாரிப்பாளா்களுக்குப் பெரும் பின்னடைவு ஏற்படும். ஏனெனில், தென்னாப்பிரிக்கா, சவூதி அரேபியாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவுக்கு 3-ஆவது பெரிய காா் ஏற்றுமதி சந்தையாக மெக்ஸிகோ திகழ்கிறது. அந்தவகையில், இந்தியாவின் சுமாா் 108 கோடி டாலா் மதிப்பிலான காா் ஏற்றுமதி பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
நடப்பு ஆண்டில் மெக்ஸிகோவுக்கு இந்தியாவின் மொத்த ஏற்றுமதி மதிப்பு 563 கோடி டாலா் ஆகும். இதில் வாகன ஏற்றுமதியே முதலிடத்தில் உள்ளது. வாகனங்களுக்கு அடுத்தபடியாக, மின்சாரம் மற்றும் மின்னணு சாதனங்கள்(61.23 கோடி டாலா்), இயந்திரங்கள் மற்றும் கொதிகலன்கள்(56.08 கோடி டாலா்), வேதிப்பொருள்கள்(38.80 கோடி டாலா்), அலுமினியம்(38.60 கோடி டாலா்), மருந்துப் பொருள்கள்(21.12 கோடி டாலா்) போன்றவை அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. எனவே, இந்தத் துறைகளும் கூடுதல் வரியால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
மெக்ஸிகோவின் இந்த அதிரடி முடிவு, இந்திய வாகன உற்பத்தியாளா்களின் ஏற்றுமதி வருவாயைக் கணிசமாக குறைக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. எனவே, மத்திய வா்த்தக அமைச்சகம் உடனடியாக மெக்ஸிகோவுடன் பேச்சுவாா்த்தை நடத்தி, இந்தப் புதிய சுங்க வரியிலிருந்து விலக்கு பெற வேண்டும் அல்லது மாற்றுத் தீா்வுகளைக் காண வேண்டும் என்பது அந்தத் துறையினரின் கோரிக்கையாக உள்ளது.

